“மதுரையில் கொரோனா பலி 2 ஆக உயர்வு!!” மீனாட்சி அம்மன் கோயில் பட்டரின் தாயார் உயிரிழப்பு..! சமூக பரவலாக மாறுகிறதா என பீதி!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மதுரையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த மீனாட்சி அம்மன் கோயில் பட்டரின் 71 வயது தாயார் உயிரிழந்துள்ளார். வெளியூர் தொடர்பு ஏதுமில்லாத 71 வயது மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது எப்படி? கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதா? என்ற பீதி எழத் தொடங்கியுள்ளது.

 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு மதுரையில் தான் நிகழ்ந்தது.கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த 51 வயது நபர் உயிரிழந்தார். இந்நபர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுடன் தொடர்பில் இருந்த நிலையில் கொரோனா தொற்று பரவியதாக கூறப்பட்டது.இந்நிலையில் மதுரையில் இதுவரை 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

 

இதில் மதுரை மேலமாசி வீதியில் வசிக்கும் 71 வயது மூதாட்டி மற்றும் செல்லூர் மணவாள நகரைச் சேர்ந்த 60 வயது நபர் ஆகிய இருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் இருவருமே, வெளிநாடு வெளி மாநிலம் என வெளித் தொடர்பு இல்லாதவர்கள் என்ற நிலையில், இவர்களுக்கு தொற்று ஏற்பட்டது எப்படி என சுகாதாரத் துறை அதிகாரிகள் மும்முரமாக விசாரித்து வந்தனர். இதில் 71 வயது மூதாட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டர் ஒருவரின் தாயார் என்பதும், அவர் வீட்டை விட்டு செல்லாத நிலையில் தொற்று பரவியது எப்படி என்ற பரபரப்பு எழுந்தது.மீனாட்சி அம்மன் கோயில் பட்டரான அவரது மகன் கடந்த 12-ந்தேதி வரை கோயிலில் பூஜையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

இதனால் நேற்று மீனாட்சி அம்மன் கோயில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் கோயிலில் உள்ள மற்ற பட்டர்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் என அத்தனை பேருக்கும் கொரோனா பரிசோதனையும் நேற்று அவசரமாக நடத்தப்பட்டது.

 

இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் பட்டரின் 71 வயது தாயார் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார். இதனால் மதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் வெளித் தொடர்பு எதுவும் இல்லாத நிலையில் கொரோனா தொற்று இருவருக்கு பரவியதால், கொரோனா பரவல் 3-ம் கட்டமான சமூகப் பரவலாக மாறியுள்ளதா? என்ற பீதி மதுரையில் எழுந்துள்ளது.இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டால், சமூகப் பரவல் என்றும் சொல்ல முடியாது; இல்லை என்றும் கூற முடியாது என்று மழுப்பலாக கூறியதுடன், மக்கள் வெளியில் நடமாடும் விஷயத்தில் இனியும் மெத்தனம் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply