ஊரடங்கால் கன்னியாகுமரியில் சிக்கித்தவித்த கேரள வியாபாரி உயிரிழப்பு…!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கன்னியாகுமரி மாவட்டத்தில் சிக்கித்தவித்த கேரளா வியாபாரி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கேரள மாநிலம் கொல்லம் பள்ளியைச் சேர்ந்த கூலி வியாபாரி கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலய திருவிழாவிற்காக கடந்த மார்ச் ஒன்றாம் தேதி வந்தார். ஊரடங்கால் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத அவர் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளால் அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 

நோயின் தீவிரத்தால் கேரள மாநிலம் ஆலப்புழை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை கேரள சோதனைச்சாவடியில் இரு முறை திருப்பி அனுப்பியுள்ளனர். இதற்கிடையே உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார்.

 

அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க இருமாநில எல்லையோர மாவட்ட ஆட்சியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் கொரொனா பரிசோதனைக்கு பின்பு உடல் கேரளாவுக்குள் அனுமதிக்கப்படும் என கேரள காவல்துறையினர் கூறியுள்ளனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முகாமில் உள்ள இலங்கை அகதிகள் வேலை இழந்து தவித்து வந்த நிலையில் காவல்துறையினர் அவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி உதவினர். இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் 43 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் கூலி வேலை செய்து வந்தனர்.

 

ஆனால் ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்துள்ளவர்கள் உணவுக்கு வழியின்றி தவித்து வந்தனர். இது குறித்து அறிந்த மார்த்தாண்டம் காவல் நிலையத்தினர் தங்களது பணத்திலேயே ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினர்.


Leave a Reply