“தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு கிடையாது!!” மே 3-ந்தேதி வரை கட்டுப்பாடுகள் நீடிக்கும்..! தமிழக அரசு அறிவிப்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு எதுவும் செய்யப்படாது என்றும் மே 3-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுபடுத்துவதற்காக கடந்த மார்ச் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்ப்பட்டது. தொடர்ந்து 2-வது முறையாக மீண்டும் மே 3-ந் தேதி வரை மேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கை மத்திய நீட்டித்தது.

 

ஆனால் இந்த 8றை, ஏப்ரல் 20-ந் தேதி முதல் ஊரடங்கை தளா்த்துவதற்கான சில விதிமுறைகளை மத்திய அரசு கடந்த புதன்கிழமை அறிவித்த து. ஊரகப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், விவசாயம், பண்ணை சாா்ந்த தொழில்கள், நெடுஞ்சாலையோர உணவகங்கள் உள்ளிட்ட முக்கிய தொழில்களுக்கு தளா்வு அளித்து இயங்க அனுமதிக்கலாம் என அறிவிக்கப்பட்டதுடன் இதுகுறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என அறிவுறுத்தியிருந்தது.

 

எனவே, தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது குறித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து திங்கட்கிழமை அறிவிப்பார் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கென, தமிழக அரசு சாா்பில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தங்களது அறிக்கையை இன்று முதல்வரிடம் சமர்பித்திருந்தது. இந்த வல்லுநர் குழு அறிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி, சென்னை கோட்டையில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை முடிவில், தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு இல்லை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஏப்ரல் 20-ந் தேதி மத்திய அரசு வெளியிட்ட ஆணையில், 20.4.2020-க்குப் பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

 

டெல்லி, கர்நாடகம், பஞ்சாப், தெலங்கானா, மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்கள், தற்போதுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலினை கருத்தில் கொண்டு, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவெடுத்துள்ளன.

 

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்வு செய்வது குறித்து ஆராய, 16.4.2020 அன்று ஒரு வல்லுநர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்து ஆணையிட்டு இருந்தது. அக்குழு, முதல் கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை முதல்வரிடம் இன்று (20.4.2020) சமர்ப்பித்தது. இந்தக் குழுவின் ஆலோசனைகள் கவனமாக ஆராயப்பட்டன.

 

இதன் அடிப்படையில், நோய்த் தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டியுள்ளதால், தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள 3.5.2020 வரை தொடர்ந்து கடைப்பிடிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்துள்ளது.

 

அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கனவே அரசால் அளிக்கப்பட்ட விதி விலக்கு தொடரும். நோய்த் தொற்றின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து, நோய்த் தொற்று குறைந்தால், வல்லுநர் குழுவின் ஆலோசனையினை பெற்று, நிலைமைக்கு ஏற்றாற்போல் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply