ஒரு வழியாக கொரோனா ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்று மாலை இந்தியா வருகிறது..! 6.5 லட்சம் கிட்களுடன் சீனாவில் இருந்து புறப்பட்டது விமானம்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா பரிசோதனையை விரைவாக நடத்த உதவும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்று மாலை இந்தியா வருகிறது. முதற்கட்டமாக 6.5 லட்சம் கருவிகளுடன் சீனாவில் இருந்து விமானம் புறப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஒருவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதா? என்பதை கண்டறியும் சோதனைகளை நடத்துவதில் இந்தியா இன்னும் பின்தங்கியே உள்ளது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இதுவரை 3 லட்சம் பேருக்கு மட்டுமே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. பிசிஆர் கருவிகள் மூலம் நடத்தப்படும் சோதனைகளில் முடிவுகள் கண்டறிவதில் தாமதம் ஆவதே காரணமாக கூறப்படுகிறது.

 

இதனால், அதிவிரைவாக பரிசோதனை நடத்தும் ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு சீனாவில் ஆர்டர் செய்தும் இந்தியா வந்து சேர்வதில் தாமதமாகி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மொத்தம் 70 லட்சம் கருவிகள் வாங்க சீனாவிடம் இந்தியா ஆர்டர் செய்திருந்தது. இதில் தமிழகம் மட்டும் 4 லட்சம் கருவிகளை ஆர்டர் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

கடந்த 10-ந் தேதியே இந்தக் கருவிகள் இந்தியா வந்து சேரும் எனவும், அதன் பின் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோருக்கு கொரோனா சோதனை நடத்துவது வேகமெடுக்கும் என கூறப்பட்டது. ஆனால் சீனாவோ, இந்தியாவுக்கு அந்தக் கருவிகளை அனுப்பாமல் அமெரிக்காவுக்கு அனுப்பி விட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பானது.

 

இந்நிலையில், முதற்கட்டமாக 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளுடன் சீனாவில் இருந்து விமானம் புறப்பட்டு விட்டதாகவும், இன்று மாலை டெல்லி வந்து சேரும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தக் கருவிகளை பல்வேறு மாநிலங்களுக்கும், அந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக் கேற்ப பங்கு பிரித்து மத்திய அரசு அனுப்பி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இதனால், தமிழகத்தில் அடுத்த ஓரிரு தினங்களில், கொரோனா பரிசோதனை அதிதீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது பரவலாக மாநிலம் முழுவதும் பரிசோதனை நடத்தும் போது தான், உண்மையான கொரோனாவின் தாக்கம் பற்றி தெரிய வரும் என்று கூறப்படுகிறது.


Leave a Reply