திருச்சியில் கொரோனா சிகிச்சை முடிந்து ஒரே நாளில் 32 பேர் டிஸ்சார்ஜ்..! உற்சாகமாக வழியனுப்பி வைத்த ஆட்சியர், மருத்துவர், செவிலியர்கள்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா பாதிப்பு டன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 32 பேர் குணமடைந்தனர். அவர்களை மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் கை தட்டி, கையசைத்து உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

 

கொரோனா பாதிப்பால் திருச்சி அரசு மருத்துவமனையில், திருச்சி, ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 47 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர், ஏற்கனவே குணமடைந்து, கடந்த 10-ந் தேதி வீட்டுக்கு அனுப்பப்பட்டார். மீதமுள்ளவர்களில் தற்போது 32 பேர் குணமடைந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தொடர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

 

இதனால் 32 பேரையும் இன்று அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேர், பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஒருவர் என 32 பேரும்,108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனையில் இருந்து பத்திரமாக புறப்பட்டனர். அப்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பழ வகைககள் அடங்கிய கூடைகளை வழங்கி அனைவரையும் வாழ்த்தினார். மேலும் இவர்களுக்கு இரவு பகல் பாராது சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாள்களுக்கும் ஆட்சியர் சிவராசு பாராட்டுகளை தெரிவித்தார்.

 

பின்னர் ஆம்புலன்ஸ் வாகனங்களில் வீடுகளுக்கு புறப்பட்ட 32 பேரையும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவரும் கை தட்டி உற்சாகமாக வழியனுப்பி வைத்த காட்சி நெகிழ்ச்சிகரமாக இருந்தது. இந்த 32 பேரும் தொடர்ந்து மேலும் 14 நாட்களுக்கு வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி மருத்துவக் கண்காணிப்பில் இருக்கவும் திருச்சி மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply