ஊரடங்கை நீட்டிப்பதில் தயக்கம் ஏன்..? தட்டிக்கேட்டால் சந்தர்ப்பவாதம் என்பதா? முதல்வர் எடப்பாடி மீது மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் உரிய நேரத்தில் தட்டிக் கேட்பதை சந்தர்ப்பவாதம் என்பதா? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், ஊரடங்கை நீட்டிப்பதில் தமிழக அரசுக்கு இன்னும் தயக்கம் ஏன்? எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், கொரோனா தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு திமுக உறுதுணையாக இருக்கும் என்றும், ஊரடங்கை உடனடியாக நீட்டிக்க வேண்டும்.

 

ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பறித்தது தவறு எனவும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்திலும் மு.க.ஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக விமர்சனம் செய்திருந்தார்.

 

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்தக் கருத்துக்கு பதிலடி தரும் வகையில் மு.க.ஸ்டாலின் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கொரோனா பரவத் தொடங்கியபோது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தியது. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தவும் கோரிக்கை விடுத்தோம். அதையெல்லாம் இந்த அரசு செவிமடுக்கவில்லை. எதையும் கேட்கவேண்டிய சந்தர்ப்பத்தில்தான் கேட்கிறேன்; சந்தர்ப்பவாதம் பற்றி முதல்வர் பேசலாமா? எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் தட்டிக்கேட்டால் சந்தர்ப்பவாதம் என்பதா?அரசாங்கம் ஒழுங்காக முறையாக மக்களுக்கு செயல்படாவிடில் அரசாங்கத்தை திமுக செயல்பட வைக்கும்.

 

மிகப்பெரிய சுகாதார பேரிடர் பிரச்னையில் முதலில் சுகாதார அமைச்சர் ஒதுக்கப்பட்டார். சுகாதார செயலாளரை முன்னிலைப்படுத்திய நிலையில் அவரையும் புறந்தள்ளியது யார்?

 

தலைமைச்செயலாளரையே தனது செய்தித் தொடர்பாளராக மாற்றி அரசியல் செய்வது முதல்வர் தான் என்று காட்டமாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின், ஊரடங்கை நீட்டிக்க இன்னும் தயக்கம் காட்டுவது ஏன்? என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.


Leave a Reply