“கொரோனா உயிரிழப்பில் இத்தாலியை முந்தி அமெரிக்கா முதலிடம்!!” இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?

Publish by: நாகராஜன் --- Photo : கோப்பு படம்


உலகளவில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் பட்டியலில் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. ஒரு மாதம் முன்பு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடாக இருந்த சீனா இப்போது 8-வது இடத்துக்கு பின் தள்ளப்பட்ட நிலையில், இந்தியா 22-வது இடத்துக்கு வேகமாக முன்னேறியுள்ளது.

 

கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி சீனாவின் ஊகான் நகரில் பிறப்பெடுத்த கொரோனா வைரஸ் என்னும் ஆட்கொல்லி , அந்நாட்டின் ஒரு ஹீபே மாகாணத்தை உண்டு இல்லை என்பது போல் சின்னாபின்னமாக்கியது. நாட்டின் வேறு பகுதிகளுக்கு இந்த வைரஸ் பரவாமல் தடுத்த சீனா, மூன்றே மாதங்களில் மீண்டெழுந்தது எனலாம். இந்த 3 மாதத்தில் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை மட்டும் 3 ஆயிரத்தை தாண்டியது.

இந்த வைரஸ் சீனாவை புரட்டிப் போட்ட அந்த நாட்களில் உலகின் மற்ற நாடுகளில் அங்கொன்றும், இங்கொன்றும் என உயிரிழப்பு சொற்பமாகவே இருந்தது. கடந்த மார்ச் 1-ந் தேதி நிலவரப்படி, உலக அளவில் உயிரிழப்பு மொத்தமே 3050 என்ற நிலையில் சீனாவில் மட்டும் அதிக உயிரிழப்பாக 3 ஆயிரமாக இருந்து பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

 

ஆனால் கடந்த மார்ச் முதல் வாரம் முதல் உலகின் பல நாடுகளுக்கும் படையெடுத்த கொரோனா, முதலில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியை பதம் பார்த்தது. கொத்து கொத்தாக மக்கள் மடிந்து உயிரிழப்பு கிடு கிடுவென உயர்ந்தது. இதனால் ஒரு சில நாட்களிலேயே உயிரிழப்பில் சீனாவை முந்திய இத்தாலியில் இன்று வரை 1,9,468 ஆக உயர்ந்து உயிரிழப்பு சோகம் தொடர்கிறது. அடுத்து ஸ்பெயின் நாடு கொரோனாவால் சின்னாபின்னமாகி 16,600 பேரின் உயிரை காவு கொடுத்தும் கட்டுப் படுத்த முடியாமல் தள்ளாடுகிறது. மற்ற ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் (13832), பிரிட்டன் (9875), பெல்ஜியம் (3346), ஜெர்மனி ( 2871), ஹாலந்து (2643) ஆகிய நாடுகளை ஒரு வழியாக்கி வருகிறது.

இதில் உலகின் பெரும் வல்லரசான அமெரிக்காவின் நிலைமை தான் ரொம்பவே மோசமாகி விட்டது எனலாம். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் என்பது சுனாமியை விட அதிவேகம் எனலாம். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே மாதத்தில் அந்த நாட்டின் நிலைமை தலைகீழாகி விட்டது. கொரோனாவால் கதிகலங்கியுள்ள அமெரிக்காவில், இப்போது பாதிப்பு எண்ணிக்கையும் , உயிரிழப்பும் ஜெட் வேகத்தில் உள்ளது.

 

இன்றைய நிலவரப்படி உலகில் மொத்த வைரஸ் பாதிப்பு 17,லட்சத்து 81 ஆயிரத்து 432 எனில் அதில் 5, லட்சத்து 33, ஆயிரத்து 115 பேர் அமெரிக்கர்கள் ஆவர். அதே போல் உலக அளவில் மொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 8883 என்று உயர்ந்துள்ள நிலையில் அமெரிக்காவில் மட்டும் பலியானோர் எண்ணிக்கை 20,580 என கிடுகிடுவென உயர்ந்து உலக அளவில் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த ஓரிரு வாரங்களில் வட்சத்தை எட்டினாலும் ஆச்சர்யமில்லை என அந்நாட்டு அதிபர் டிரம்ப் அலறுகிறார்.

கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில், இதன் தாக்கம் எட்டிப் பார்க்காத நாடுகள் என்றால் ஒரு சில சின்னஞ் சிறு தீவு நாடுகள் மட்டும் தான். மேலும் ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள நாடுகள் பலவற்றுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்றாலும் அங்கு இன்னும் பெரும் பாதிப்பு இல்லை.

 

இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு அடுத்த சில வாரங்களில் தெற்காசிய நாடுகளில் தனது கோரப்பசியை தீர்க்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கேற்றாற்போல், தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் அதிக மக்கள் தொகையையும், பெரும் பரப்பளவையும் கொண்ட நமது இந்தியாவில் இப்போது கொரோனாவின் கொடூர ஆட்டம் வேகமெடுத்துள்ளது என்றே கூறலாம்.

 

இன்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 8600 ஆகவும், உயிரிழப்பு 290 ஆகவும் உயர்ந்து உலக அளவில் பாதிப்புக்கு ஆளான நாடுகள் பட்டியலில் 22-வது இடத்தில் உள்ளது. இதனால் அடுத்து வரும் நாட்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்குமா? என்ற பீதியும், அச்சமும் நிலவி வருகிறது.

 


Leave a Reply