கொரோனா பிடியில் இருந்து மீண்டார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்..! மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குணமடைந்து வீடு திரும்பினார்.

 

உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள ஆட்கொல்லி கொரோனா, ஐரோப்பிய நாடுகளை துவம்சம் செய்து வருகிறது. உலகம் முழுவதும் மொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஹாலந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது.

 

இந்த கொரோனா வைரஸ் உலக நாட்டுத் தலைவர்கள் , மன்னர்கள் குடும்பத்தையும் விட்டு வைக்க வில்லை. ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா சாரா சில நாட்களுக்கு முன் கொரோனாவுக்கு பலியானார். பிரிட்டன் இளவரசர் சார்லஸ், கொரோனா பாதிப்புக்கு ஆளாகி குணமான நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் கொரோனா பாதிப்புக்கு ஆளானார். இதனால் 10 நாட்களுக்கு மேல் வீட்டிலேயே தம்மை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 

கடந்த வாரம் திடீரென போரிஸ் ஜான்சனின் உடல்நிலை மோசமானதால் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் அவருடைய உடல் நிலை மேலும் மோசமானதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

 

இதனால் போரிஸ் ஜான்சன் உடல் நிலை குறித்து கவலையடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்டோர், போரிஸ் ஜான்சன் விரைவில் உடல் நலம் தேற வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்த போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் .


Leave a Reply