“நாளை முதல் தமிழகத்தில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை!!” ஒரே நேரத்தில் 1 லட்சம் பேருக்கு சோதனை..! 30 நிமிடங்களில் ரிசல்ட்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு, 30 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளை அறியும் வசதி கொண்ட ஒரு லட்சம் கருவிகள் சீனாவிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.தமிழகத்தில் நாளை முதல் இந்த துரித சோதனை நடத்தப்பட உள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் இப்போது வேகமெடுத்துள்ளது என்றே கூறலாம். கடந்த இரு வாரங்களில் இந்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்து, இந்தியா முழுவதும் 5916 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, பலி எண்ணிக்கையும் 178 ஆக உயர்ந்துள்ளது, இந்த வைரஸ் பாதிப்பில் இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 1126 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி 74 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 17 பேர் பலியாகியுள்ளனர்.

 

இதற்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தமிழகமும், 3-வது இடத்தில் டெல்லியும் உள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 738 ஆகவும், உயிரிழப்பு 8 ஆகவும் உள்ளது. தமிழகத்தில் கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றை கண்டறியும் பரிசோதனைக் கருவிகள் போதிய அளவில் இல்லாததால் இவர்களிடம் இன்னும் சோதனை நடத்தப்படவில்லை. இதுவரை மொத்தம் 6 ஆயிரம் பேரிடம் மட்டுமே ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் அதிவிரைவு (Rapid test) சோதனை நடத்தும் கருவிகளை சீனாவில் இருந்து வாங்க தமிழகம் ஆர்டர் செய்திருந்தது.

கொரோனா தொற்று சோதனைக்காக சீனாவிலிருந்து ஒரு லட்சம் துரித சோதனை கருவிகள் தமிழகத்திற்கு இன்று வந்து சேர உள்ளன. இந்தக் கருவிகள் நாளை முதல் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படவுள்ளன. இந்தக் கருவிகள் மூலம் விரைவாகவும் வேகமாகவும் ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். அந்தப் பரிசோதனையின் முடிவுகளை 30 நிமிடங்களில் தெரிந்து கொள்ளவும் முடியும். இதனால் கொரோனா அதிகம் பாதித்த இடங்களுக்கு இந்த உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. முதலில் வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளவர்களிடம் இந்த துரித சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

 

பின்னர் இந்த துரித பரிசோதனை கருவிகள் மூலம் சமூகப் பரவல் இருக்கிறதா என்பதை அறிய, கொரோணா அதிகம் பாதித்த பகுதிகளில், ஒட்டு மொத்தமாக பொதுமக்களிடம் பரிசோதனை நடத்தப்படவும் உள்ளது. நாளை முதல் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை துரிதப்படுத்தப்பட உள்ள நிலையில், உண்மையான பாதிப்பு நிலவரம் தெரிய வரும் என்று தெரிகிறது.


Leave a Reply