மாணவர்களுக்காக இணையதளம் மூலம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வாட்ஸ்அப், ஸ்கைப் உள்ளிட்ட செயலிகள் மூலம் இணைய வாயிலாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. கொரொனா அச்சத்தால் நாடு முழுவதும் கடந்த 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.

 

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை தவிர பிற வகுப்புகளுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவால் மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கி இருப்பதால் அவர்களது கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சில தனியார் பள்ளிகள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கல்வி போதிக்க தொடங்கியுள்ளன.

 

கோவை மாவட்டம் சியாமலாபுரத்தில் உள்ள மெட்ரிக் பள்ளியில் முதற்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆசிரியர்கள் தங்களது வீட்டிலிருந்தபடி இணையதளத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்து காலை மற்றும் மாலை வேளையில் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

 

விடுமுறை காலத்தில் இதுபோன்ற சிறப்பு வகுப்புகளை நடத்துவதன் மூலம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு தேர்வு நடைபெறும் போது அதனை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கடலூரில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடி கரும்பலகையில் பாடம் நடத்தி அதனை வீடியோ பதிவு செய்து வாட்ஸ் அப் செயலி வாயிலாக மாணவர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

 

மாணவர்கள் வீட்டிலிருந்து இந்த வீடியோ பதிவுகளை பார்த்து கல்வி பயின்று வருகின்றனர். ஆசிரியர்கள் வீட்டில் கரும்பலகை இல்லாதபட்சத்தில் தங்கள் வீட்டு கதவை கரும்பலகையாக மாற்றி பாடம் எடுத்து வருகின்றனர். வீட்டோடு அடங்கியிருக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்கு இணையதளம் வரப்பிரசாதமாக மாறியுள்ளது.


Leave a Reply