--- --:--:-- --

5 ரூபாய்க்கு விற்ற முட்டை ரூ.1.95… ரூ.200 வரை விற்ற சிக்கனை ஓசியா கொடுத்தாலும் சீந்துவாரில்லை..! நாமக்கல் பண்ணையாளர்கள் கதறல்!!

5 ரூபாய்க்கு விற்ற முட்டை ரூ.1.95… ரூ.200 வரை விற்ற சிக்கனை ஓசியா கொடுத்தாலும் சீந்துவாரில்லை..! நாமக்கல் பண்ணையாளர்கள் கதறல்!!

கொரானா பீதியால், பிராய்லர் கோழி, முட்டை சாப்பிடுவதை மக்கள் தவிர்த்துள்ளதால் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் பல நூறு கோடி ரூபாய் நஷ்டமடைந்து கதறுகின்றனர். ரூ 5 வரை விற்ற முட்டை ஒரு ரூபாய் 95 பைசாவாக சரிந்தும், கோழிகளை ஓசியாக கொடுத்தாலும் யாரும் வாங்க மறுப்பதால் உயிரோடு குழி தோண்டி புதைக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.

 

கொரானா வைரஸ் மனிதனை அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது என்றால் அதன் தாக்கம், உலகின் பொருளாதாரத்தையே சீர்குலையச் செய்து விட்டது. அனைத்து தொழில்களும் முடங்கிப்போய் பெரும் கோடீஸ்வரர்கள் முதல் அன்றாடங்காய்ச்சிகளான சாமான்யன் வரை கொரானாவின் தாக்கத்தால் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்கள் கூடும் இடங்கள் பலவற்றுக்கும் தடை போடப்பட்டு விட்டதால் மக்கள் நடமாட்டம் குறைந்து பல்வேறு சிறு தொழில் செய்வோரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

 

இதில் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்களின் பாடுதான் படு திண்டாட்டத்துக்கு ஆளாகியுள்ளது. இந்தியாவிலேயே நாமக்கல் பகுதி தான் பிராய்லர் கோழி உற்பத்திக்கும், முட்டை உற்பத்திக்கும் பேர் போன பகுதியாகும். இங்கிருந்து தான் தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் கோழி இறைச்சி மற்றும் முட்டை ஏற்றுமதி கூட செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு 2.5 கோடி முட்டை, 20 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தியாகிறது.

இப்போது கொரானா பீதி உலகை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் கோழி முட்டை சாப்பிடுவதால் கொரானா பரவும் என ஒரு வதந்தியை தீயாய் பரப்பிவிட்டு விட்டார்கள். இதன் விளைவு ரூ.200 வரை விற்ற கோழி இறைச்சி திடீரென் சரியத் தொடங்கியது. ரூ 70, 80 வரை விலை போவது கூட சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டது. முட்டை விலையும் 5 ரூபாய் என்பதில் இருந்து சரியத் தொடங்கியது. இதில் கொரானா போதாது என்று கேரளா, கர்நாடகாவில் பறவைக் காய்ச்சலும் பரவ நாமக்கல் பண்ணையாளர்களுக்கு இரட்டை தாக்குதலாகி விட்டது. இதனால் கோழிக்கறி விற்பனை அதல பாதாளத்துக்கு சென்று விட்டது.

 

பிராய்லர் கோழிக்கறி சாப்பிட்டால் கொரானா வராது என அமைச்சர்கள் முதல் நடிகர்கள் வரை பலரும் குரல் கொடுத்தாலும் மக்களிடம் பீதி குறைந்தபாடில்லை. இதனால் கோழிகள் தேக்கமடைய , தீவனம் போட்டு வளர்த்தாலும் கோழிகள் குறிப்பிட்ட நாளுக்கு மேல் தாக்குப் பிடிக்காது;உடல் எடை கூடி நடக்க முடியாமல் இறந்து விடும் என்பதால் ஓசியிலாவது மக்கள் சாப்பிடட்டும் என்று கூவிக்கூவி இலவசமாக கொடுத்தாலும் மக்கள் சீந்துவதாக தெரியவில்லை. இதனால் கோழிகளை கொத்து கொத்தாக உயிரோடு புதைக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.

 

முட்டையின் விற்பனை நிலைமையும் படு மோசமாகி வருகிறது. கொரானா பீதிக்கு முன் ரூ 5 வரை விற்ற முட்டை, இப்போது விற்பனை மந்தமானதால் தேக்கமடையத் தொடங்கியது. இதில் பள்ளிகளும் திடீரென மூடப்பட்டதால் சத்துணவுக்கு முட்டை சப்ளையாவது நின்று போனது நாமக்கல் பண்ணையாளர்களுக்கு அடுத்த ஒரு அதிர்ச்சியாகிவிட்டது. சுமார் 20 கோடி முட்டைகள் தேக்கமடைய, கோடை காலத்தில் முட்டையை அதிக நாள் இருப்பு வைக்க முடியாது என்பதால், விலையை பெருமளவு குறைத்து நிர்ணயம் செய்துள்ளனர். நேற்று வரை ரூ 2.65 என இருந்த ஒரு முட்டை விலை இன்று ரூ.1.95 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த அடிமட்ட விலைக்கு விற்றாலும் விற்பனையாகவில்லை என்றும், இதனால் நாமக்கல் மண்டலத்தில் மட்டும் பல நூறு கோடி ரூபாய் நஷ்டத்துக்கு ஆளாகி, தொழிலையே கைவிட வேண்டிய அவலத்துக்கு ஆளாகியுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர்.

 

கொரானா அச்சத்தால் ஓட்டல்கள் தொழிலும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாக பெரிய ஹோட்டல் வைத்துள்ளவர்கள் முதல் தெருவோர வண்டிக்கடை வைத்துள்ளவர்களும் புலம்பத் தொடங்கியுள்ளனர். கோழிக்கறி, முட்டை ஆம்லேட் விலையை குறைத்து விற்றாலும் வாடிக்கையாளர்கள், கொரானா அச்சத்தால் ஓட்டல் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள். அது மட்டுமின்றி மக்கள் நடமாட்டமும் குறைந்து பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளதாக புலம்புகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon