“மலேசியாவில் 14 நாட்களுக்கு பொதுமக்கள் வெளியில் நடமாட தடை!!” இந்தியாவுக்கும் இந்த நிலைமை வருமா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 14 நாட்களுக்கு பொது மக்கள் வெளியில் நடமாட தடை விதித்துள்ளது மலேசிய அரசு .இதே போன்ற கட்டுப்பாடு இந்தியாவிலும் விதிக்கப்படலாம் என்ற சூழல் நிலவுவதால் மக்கள் இப்போதே பீதியடைந்துள்ளனர்.

 

உலகையே புரட்டிப் போட்டுள்ளது கொரானா வைரஸ் அச்சுறுத்தல், முதலாம், இரண்டாம் உலகப்போர் நடந்த காலங்களில் கூட அரசுகளிடையேயும், மக்களிடையேயும் இந்த அளவுக்கு பீதியும், அச்சமும் நிலவியிருக்குமா? என்பது கூட சந்தேகம் தான். அந்தளவுக்கு உலக நாடுகள் கொரானா என்ற பெயரை உச்சரித்தாலே நடு நடுங்கி வருகின்றன.

 

சீனாவில் ஆரம்பித்து இப்போது இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகாத நாடுகளே இல்லை என்ற அளவுக்கு வெகு வேகமாக பரவி வருகிறது இந்த வைரஸ். பலி எண்ணிக்கையும் எட்டாயிரத்தை எட்டி விட்டது. பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தாலி, ஈரான், பிரான்ஸ் போன்ற பணக்கார நாடுகளில் இதன் பாதிப்பு பல மடங்காகி, சமாளிப்பது எப்படி என செய்வதறியாது திண்டாடிப் போய் உள்ளன.

 

கொரானாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை . இப்போது தான் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ள அமெரிக்கா அதனை மனிதனிடம் சோதித்துப் பார்க்கப் போவதாக அறிவித்துள்ளது. உடனே சீனாவும், தானும் மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும் அமெரிக்கா போல் மனிதனிடம் சோதித்துப் பார்க்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனால் இந்த கொரானா மேலும் மேலும் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கைய தடுப்பு முறைகளை கையாள்வதே தீர்வு என இப்போது உலக நாடுகள் வந்துள்ளன.இந்த தடுப்பு முறைகளை போர்க்கால அவசரத்தில் கையாண்டதால் தான், கொரானா பிடியில் இருந்து சீனா மீண்டு எழுந்துள்ளது. ராணுவத்தை முழு வீச்சில் களத்தில் இறக்கி விறுவிறுவென புதிதாக மருத்துவமனைகளை கட்டியது சீனா. அதிகம் பாதிக்கப்பட்ட ஊகான், ஹீபே மாகாணங்களில் வசிப்போரை தனிமைப்படுத்தி கண்காணித்தது. வெளிநாடுகளில் இருந்து வருவோரை அனுமதிக்க மறுத்தது. தன் நாட்டு மக்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. பள்ளிகளை மூடியது. தொழிற்சாலைகளை பூட்டுப் போட்டது. மக்கள் வெளி நடமாட்டத்தை தடுத்தது. அந்நாட்டு மக்களும் பீதியடையாமல் ஒத்துழைத்ததால் இப்போது மீண்டு விட்டது சீனா.50 நாட்களில் கிட்டத்தட்ட 4000 பேர் இறந்த நிலையில் நேற்று ஒரு உயிரிழப்பு கூட இல்லை என்ற நிலைக்கு வந்து சீனா எழுந்து நிற்கிறது .

 

ஆனால், சீனாவில் தானே இந்த வைரஸ் பரவியுள்ளது; நமக்கெல்லாம் வராது என மெத்தனம் காட்டிய பல நாடுகளும் இப்போது கொரானா தங்கள் நாடுகளுக்கும் வந்து விட்டது என்ற பின்னர் விழி பிதுங்குகின்றன. இதில் அதிக மெத்தனம் காட்டிய இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் பெருமளவு உயிரிழப்புகளை சந்தித்து இப்போது அலறுகின்றன. இதனால் வேறு வழியின்றி, இப்போது சீனா பின்பற்றிய வழி முறைகளை உலக நாடுகள் பின்பற்ற முடிவு செய்து நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளன.

 

இதன் ஒரு பகுதியாக மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பல நாடுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இத்தாலி நாட்டில் ஊரடங்கு உத்தரவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 3 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலோ 14 நாட்களுக்கு யாரும் வெளியில் நடமாடக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது, இதனை 2 நாட்களுக்கு முன்னதாகவே அறிவித்த மலேசிய பிரதமர், போதிய உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தார்.அதன் 14 நாட்கள் இன்றும் தல் அமலுக்கு வந்து, ஒட்டு மொத்த மலேசிய மக்களும் வீடுகளுக்குள் முடங்கி விட்டனர். இதனால் மலேசியா வே மயான அமைதிக்கு சென்று, கொரானா பீதியும் குறைந்துள்ளது என்றே கூறலாம்.

நம் நாட்டிலும் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.பிற நாடுகளுடனான எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளின் விமானங்களுக்கு தடை போடப்பட்டு விட்டது. தமிழகத்திலும் கூட அண்டை மாநிலங்களின் எல்லைகள் தீவிர கண்காணிக்கப்படுவதுடன், வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுரை கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களுக்கும் தடை போடப்பட்டு விட்டது.

 

இப்போது, பேருந்து, ரயில் பயணத்தை கூட தவிர்க்குமாறு வேண்டுகோள் விடப்பட்டு, இந்தியா முழுவதுமே வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் வெளியே நடமாடக் கூடாது என மத்திய, மாநில அரசுகள் இன்னும் தடை போடாத ஒன்று தான் பாக்கி என்றாலும், மக்களே இப்போது உஷாராகி வெளிநடமாட்டத்தை தவிர்த்து வருவதையும் காண முடிகிறது. ஆனாலும் கொரானா பாதிப்பு எண்ணிக்கையோ கூடிக் கொண்டே தான் செல்கிறது. நேற்று வரை 125 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 140 என உயர்ந்துள்ளது. இதனால் கொரானா பரவலை தடுக்க, மலேசியா, இத்தாலி போல் இந்தியாவிலும் மக்கள் நடமாட்டத்தை தடுக்க முழு அடைப்பு, பந்த் போல் இரு வாரங்களுக்கு ஒட்டுமொத்தமாக மக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிப்பது தான் தீர்வு என சிலர் குரல் கொடுத்துள்ளனர். இதனை பா.ம.க.இளைஞரணித் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யும் மருத்துவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளிப்படையாகவே வலியுறுத்தியுள்ளார்.கொரானா பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் குறைந்தது 3 வாரங்களுக்காவது மக்கள் நடமாட்டத்துக்கு தடை போடுவது தான் தீர்வு என அன்புமணி தெரிவித்துள்ள நிலையில், அது போன்ற தடை இந்தியாவில் வந்தாலும் வரும் என்ற பேச்சு இப்போதே எழுந்து மக்களும் உஷாராகி வருவதும் தெரிகிறது.


Leave a Reply