90 நிமிடப் பயணம் 25 நிமிடமாக மாறப்போகிறதா?
சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டம் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் (லைட்ஹவுஸ்) வரையிலான Corridor-4 வழித்தடத்தில் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) புதிய டெண்டர் கோரியுள்ளது. இதில் நிலையங்களுக்கான நுழைவு, வெளியேறும் வாயில்கள், கூடுதல் நகரும் படிக்கட்டுகள் மற்றும் பராமரிப்பு ஆய்வுத் தளங்கள் அமைக்கும் பணிகள் இடம்பெற்றுள்ளன.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு தமிழக அரசால் 104 கி.மீ. தொலைவுக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் இது 118.9 கி.மீ. ஆக விரிவுபடுத்தப்பட்டது. இதற்கான அடிக்கல் 2020 நவம்பர் 21-ம் தேதி நாட்டப்பட்ட நிலையில், 2021 ஜூன் 1-ம் தேதி கட்டுமானப் பணிகள் தொடங்கின. சுமார் ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் மூன்று வழித்தடங்கள், 128 ரயில் நிலையங்களுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் காரிடர்-4 வழித்தடமானது பூந்தமல்லி பைபாஸ் முதல் லைட்ஹவுஸ் வரை 26.1 கி.மீ. தொலைவைக் கொண்டுள்ளது. இதில் உயர்மட்டப் பாதையாக 16 கி.மீ. தொலைவும், சுரங்கப்பாதையாக 10.1 கி.மீ. தொலைவும் அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தின் பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான முதல் பகுதி மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக வடபழனி முதல் பனகல் பார்க் வரையிலான சுரங்கப்பாதையில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தற்போது கோரப்பட்டுள்ள டெண்டரில் நிலையங்களுக்கான நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளின் கட்டுமானப் பணிகள், கூடுதல் எஸ்கலேட்டர்கள் அமைத்தல், மெட்ரோ தூண்களைப் பராமரிப்பதற்கான ஆய்வுத் தளங்கள் உருவாக்குதல் ஆகியவை முக்கியப் பணிகளாக உள்ளன. இந்தப் பணிகள் நிறைவடைந்தால் நிலையங்களின் அடிப்படை கட்டமைப்புகள் முழுமையடைவதுடன், பயணிகளுக்கான வசதிகளும் மேம்படும்.
இந்த வழித்தடம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், போரூர், வடபழனி உள்ளிட்ட மேற்கு சென்னைப் பகுதிகளில் வசிப்பவர்கள் நகரின் முக்கியப் பகுதிகளுக்கு எளிதாகப் பயணிக்க முடியும். குறிப்பாக, லைட்ஹவுஸ் வரை நேரடி மெட்ரோ இணைப்பு கிடைப்பதால் சாலைப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முடியும். மேலும், ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதும் இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். இதன் மூலம் சென்னையின் பொதுப் போக்குவரத்து வசதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





