தவ்ஹீத் ஜமாத் சார்பில் ராமநாதபுரத்தில் சிறை நிரப்பும் போராட்டம்..! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இராமநாதபுரத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஏ. முஹம்மது அயூப்கான் தலைமையில் அரசு போக்குவரத்து பணிமனை அருகே இன்று இந்த போராட்டம் நடைபெற்றது . பல்லாயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் . மத்திய அரசு என்பிஆர் கணக்கெடுப்பை ஏப்ரல் மாதம் துவங்குவதாக அறிவித்திருக்கிறது. இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுவிட்டால் என்ஆர்சி வேலை எளிதாகிவிடும் . என்பிஆர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மாநில மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அகதி பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என்பதால் இதை ஆதரித்தவர்கள் கூட இதற்கெதிராக குரல் கொடுத்தும் , சட்டமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் வருகின்றனர் . CAA , NRC க்கு ஆதரவாக வாக்களித்து மோடி, அமித்ஷாவின் நோக்கத்தை அதிமுக நிறைவேற்றி இருக்கிறது .

ராஜஸ்தான் , பஞ்சாப் , டில்லி , மேற்குவங்கம் , மத்தியபிரதேசம் , தெலுங்கானா , கேரளா , ஆந்திரா , பாண்டிச்சேரி , பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மாநில மக்களின் உரிமையை காப்பதற்காக சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றியது போல் தமிழக மக்களின் உரிமையை காக்க CAA , NPR NRC க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் . தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் எழுதப்படிக்க தெரியாத லட்சக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர் . இவர்களால் மத்திய அரசு கேட்கும் ஆவணங்களை காட்ட முடியாது . இவர்கள் பிறப்புச் சான்றிதழ் காட்டவில்லை எனில் அகதி பட்டியலில் இடம் பெறுவார்கள் . 90 நாட்களை கடந்து தமிழகத்தில் இப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது . தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு சட்டமன்றத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தின் போது மாநில பேச்சாளர் மஹ்தூம் பேசினார் . மாவட்டச் செயலாளர் ஆரிப்கான், மாவட்டப் பொருளாளர் ரஹ்மான் அலி, மாவட்டத் துணைத் தலைவர் முஹம்மது பஷீர், மாவட்டத் துணைச் செயலாளர்கள் மன்சூர் அலி , சகுபான் அலி , சுல்த்தான் , தஸ்தஹீர் , ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

 


Leave a Reply