மத்தியப்பிரதேசத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது .இதில் தாங்கள் அரசு நிச்சயம் வெற்றி பெறும் என கமல்நாத் கூறி வரும் நிலையில், பாஜக வியூகம் என்ன என்பது மிக ரகசியமாகவே உள்ளது. மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியில் குழப்பங்கள் ஏற்பட்டதை அடுத்து கமல்நாத் தலைமையிலான அரசுக்கு எதிரான ஜோதிராதித்ய சிந்தியா போர்க்கொடி தூக்கினார்.

 

அவர் பாஜகவில் இணைந்த தோடு அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கமல்நாத் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அம்மாநில ஆளுநர் லால்ஜி தாண்டன் உத்தரவிட்டுள்ளார். சட்டசபை கூடியதும் ஆளுநர் உரைக்கு பிறகு சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மட்டும் நடத்த வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த உத்தரவை அடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் சட்டமன்ற கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் தங்கியிருந்த கமல்நாத் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் மத்திய பிரதேச தலைநகர் போபால் திரும்பியுள்ளனர். அவர்கள் அங்குள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் பெங்களூருவில் முகாமிட்டிருந்த கமல்நாத் அதிருப்தி எம்எல்ஏக்களும் போபால் திரும்பியுள்ளனர். மத்திய பிரதேச சட்டப் பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 230. அதில் காலியாக உள்ள இடங்கள் இரண்டு. தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் அவர்களில் 6 பேரின் ராஜினாமா மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

 

அதன்படி தற்போதைய மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 222. அதில் பெரும்பான்மைக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு சேர்த்து 115 பேர் உள்ளனர்.

 

பாஜகவுக்கு அந்த பேரவையில் 107 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 113 பேரின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே கமல்நாத் அரசு ஆட்சியை தக்கவைக்க முடியும். ஆனால் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை பொருத்தே மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு தப்புமா அல்லது கவிழுமா என்பது தெரியவரும்.