ம.பி., சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு..! கமல்நாத் அரசு தப்பிப் பிழைக்குமா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு ஆளுநர் உத்தரவிட்டுள்ளதால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கண்டம் தப்புமா? என்ற கேள்வி எழுந்து அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

 

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசில் செல்வாக்கு படைத்த தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா திடீரென கலகம் விளைவித்தார். கட்சியிலும் ஆட்சியிலும் தம்மை தொடர்ந்து புறக்கணிப்பதாக புழுக்கத்தில் இருந்த சிந்தியா கடந்த வாரம் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார். தொடர்ந்து அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், முதல்வர் கமல்நாத்தின் நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது.

 

230 உறுப்பினர்களைக் கொண்ட ம.பி. சட்டப்பேரவையில் 2 இடங்கள் காலியாக உள்ளன. 114 எம்எல்ஏக்களுடன் 4 சுயேட்சைகள், 2 பகுஜன் கட்சியினர் மற்றும் ஒரு சமாஜ்வாதி எம்எல்ஏக்கள் என 121 பேரின் ஆதரவுடன் கமல்நாத் ஆட்சி நடத்தி வந்தார். இப்போது 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் காங்கிரசின் பலம் 92 ஆக குறைந்துள்ளது. 22 பேரின் ராஜினாமாவால் சட்டப்பேரவையின் மொத்த பலமும் 206 ஆக குறைந்துள்ளது. இதனால் மெஜாரிட்டிக்கு 104 பேர் தேவை என்ற நிலையில், பாஜகவோ 107 எம்எல்ஏக்களுடன் பலமாக உள்ளது.

 

இந்நிலையில் ம.பி., சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில், நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு முதல்வர் கமல்நாத்துக்கு, ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார். ஆனால் 22 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை , சபாநாயகர் இன்னும் ஏற்காமல் உள்ளார். தம்மிடம் நேரில் கடிதம் வழங்கி உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் எனவும், ராஜினாமாவுக்கான காரணம் திருப்தி அளித்தால் மட்டுமே அதனை ஏற்க முடியும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனை வைத்தே பெங்களூருவில் தங்கியுள்ள இந்த அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்து விடலாம் என கமல்நாத் இன்னமும் நம்பிக்கையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் நாளை சபாநாயகர் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து, அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு தள்ளிப் போகலாம் என்றும் கூறப்படுகிறது.

 

எனவே நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமா? கமல்நாத் அரசு தப்பிப் பிழைக்குமா? என ம.பி. அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது.


Leave a Reply