ராமநாதபுரத்தில் ஒரு விழாவுக்கு வந்த நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார், பேட்டி கேட்ட செய்தியாளர்களிடம் கோபமாக விரலை நீட்டி எச்சரித்த விதம் சர்ச்சையாகி விட, பின்னர் அவரே சமாதானமும் செய்த சம்பவம் பரபரப்பாகி விட்டது.
ராமநாதபுரத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகி திருமண வரவேற்பு நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கலந்து கொள்வார் எனவும், காலை பத்து மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் என்றும் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.
இதனால் செய்தியாளர்கள் பலரும் 10 மணிக்கு முன்னதாகவே மண்டபத்தில் கூடினர். ஆனால் ஒரு மணி நேரம் கடந்த பிறகும் சரத்குமார் வந்தபாடில்லை. இந்நேரத்தில் மணமகனான சரத்குமார் கட்சி நிர்வாகி திடீரென செய்தியாளர்களை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தினார். பேட்டியெல்லாம் கிடையாது; சரத்குமார் வருவதற்கு முன் மைக்கையெல்லாம் எடுத்து வெளியேறுங்கள் என வலுக் கட்டாயமாக வெளியேறச் செய்தார். பேட்டிக்கு அழைத்த மாவட்டச் செயலாளரை தேடினால் அவரையும் காணவில்லை.
இதனால் மண்டபத்துக்கு வெளியே செய்தியாளர்கள் காத்துக் கிடந்தனர். ஒரு வழியாக சரத்குமார், காலை 11.45 மணியளவில் திருமண வரவேற்பு நிகழ்வுக்கு வந்தார். அப்போது அவரிடம் பேட்டி எடுப்பதற்காக செய்தியாளர்கள் சூழ்ந்தனர். சரத்குமாரும் செய்தியாளர்களிடம், உங்களை யார் வரச் சொன்னது? நான் உங்களுக்கு பேட்டி கொடுக்க வரவில்லை. திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குத் தான் வந்துள்ளேன் என்று கூற, உங்கள் மாவட்டச் செயலாளர் தான் எங்களுக்கு அழைப்பு விடுத்தார் என்ற கூற அப்போது செய்தியாளர்களுக்கும் சரத்குமாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சரத்குமார் கை விரல்களை நீட்டிய படி, சகோதரா நானும் பத்திரிகையாளர் தான்.. என கோபமானார். இதனால் அந்த இடமே பரபரப்பானது. பின்னர் சமாதானம் செய்த சரத்குமார் விழா முடிந்து பேட்டி தருவதாக கூறி மண்டபத்துக்குள் சென்றார்.
அதன்பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து செய்தியாளர் சந்திப்பை நடத்திய சரத்குமார், ரஜினி குறித்த கேள்விக்கும் ஏடாகூடமாக பதிலளித்தார். ரஜினிகாந்த் கருத்து குறித்து பேச வேண்டுமானால் எனது அக்கவுண்ட் நம்பர் தருகிறேன். ஐந்து லட்சம் ரூபாய் போட்டால் ரஜினி கருத்து குறித்து விலாவாரியாக பேசுகிறேன் என்றார்.
தொடர்ந்து , ரஜினி கட்சி தொடங்கிய பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற சரத்குமார், தற்போது தமிழகத்தில் வெற்றிடம் கிடையாது .மிகப்பெரிய ஆளுமையாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார் என்றார். குடியுரிமைச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை. இஸ்லாமியர்கள் யாரும் பாதிக்கப்படுவதாக எனக்கு தெரியவில்லை. எதிர்க்கட்சியினர் தான் திட்டமிட்ட சதி செய்கிறார்கள். ஒரு குடும்பம் போல் நாடு செயல்படுகிறது. இதனை பிரிக்க நினைக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறேன் என்றார். மேலும் கள் இறக்க அனுமதி கொடுத்தால் பல்வேறு சிக்கல்கள் எழும் என்றும் பனை வாரியம் அமைத்து பனைத் தொழிலாளர் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என்றும் சரத்குமார் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பு என மாவட்டச் செயலாளர் அழைப்பு விட, உங்களை யார் வரச் சொன்னது என சரத்குமார் எகிற, ராமநாதபுரத்தில் செய்தியாளர்கள் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் வேதனையான ஒன்றாகிவிட்டது.