ரஜினி அரசியலுக்கு வரப்போவது என்பது அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்ற கதை தான். இதனால் அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதையே அவரது கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
ரஜினி இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றே அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் ரஜினியோ, தாம் அரசியலுக்கு வரப்போவதற்கு முன்பு என்னென்ன நடக்க வேண்டும் என்பவற்றை பெரும் பிரசங்கம் செய்வது போல பேசிவிட்டு, செய்தியாளர்கள் கேள்விக்கு கூட இடமளிக்காமல் சென்று விட்டார்.
தாம் அரசியலுக்கு வந்தால் கட்சிக்கு தலைவனாக இருப்பேன். முதல்வராக வேறொருவரை அமர்த்தி வழி நடத்துவேன். அதிக கட்சிப் பதவிகள் கூடாது. இப்போது சிஸ்டம் சரியில்லை. அதை சரி செய்ய வேண்டும். ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் வெற்றிடம் உள்ளது. அரசியலில் நுழைய இப்போது சரியான தருணம்.திமுக, அதிமுக என்ற 2 பெரும் ஜாம்பவான்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் தாம் சொல்வது எல்லாம் சரி செய்யப்பட வேண்டும். மக்களிடம் புரட்சி ஏற்பட வேண்டும். அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்புறம் தான் அரசியலுக்கு வருவேன் என்ற ரீதியில் ஞானி போல ரஜினி பெரும் பிரசங்கம் செய்து விட்டுச் சென்றுள்ளார்.
ரஜினி கட்சி ஆரம்பிக்கும் முன்னரே இப்படி அடுக்கடுக்காக திட்டங்களையும், தனது கருத்துக்களையும் தனது வழக்கமான பாணியில் ஏடாகூடமாக கூறியுள்ளது ஏகப்பட்ட விமர்சனங்கள், கிண்டல்களுக்கு ஆளாகியுள்ளது என்றே கூறலாம்.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் ரஜினியின் கருத்தை பலவிதமாக விமர்சித்தாலும், ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்பது போலவே பேசி வருகின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து கூறுகையில்,
ரஜினி பொது வாழ்க்கைக்கு வரப்போவதில்லை என்பதையே அவரது கருத்து வெளிப்படுத்துகிறது.
அரசியல் கட்சி தொடங்கும் முன்னரே ரஜினி கூறுவது,அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்ற கதையாகத்தான் இருக்கிறது. அவர் சொல்வது போல் எல்லாவற்றையும் சரிசெய்து விட்டு வருவது என்றால் எந்தக் காலத்திலும் அவர் அரசியலுக்கு வர முடியாது. அரசியலில் இறங்கித் தான் இவற்றையெல்லாம் சீரமைக்க முடியும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.