கொரானா வைரசுக்கு இந்தியாவில் முதல் பலி? கர்நாடகாவில் 79 வயது முதியவர் உயிரிழப்பு!!

கொரானா வைரசுக்கு இந்தியாவில் முதல் பலியாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரானா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலால் ஈரான், இத்தாலி, தென் கொரியா நாடுகளிலும் பலி எண்ணிக்கை அதிகரித்து உலகம் முழுவதும் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது

 

இந்தியாவிலும் கொரானா வைரஸ் பீதியை கிளப்பியுள்ளது.நாடு முழுவதும் இதுவரை 60 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 20 பேருக்கு கொரானா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அந்த மாநிலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்களும் வரும் 31-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டன. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும் பக்தர்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், முக்கிய சுற்றுலா இடங்களும் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரானோ பாதிப்பு இல்லை. பாதிக்கப்பட்ட ஒரே ஒரு நபரும் சிகிச்சையில் குணமாகி விட்டார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். ஆனால் இன்று துபாயிலிருந்து சென்னை வந்த திட்டக்குடியைச் சேர்ந்த டிரைவர் ஒருவருக்கு கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில், கொரானா வைரசால் இந்தியாவில் இதுவரை உயிரிழப்பு ஏதுமில்லை என்ற நிலையில், முதல் உயிரிழப்பு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் கல் புர்கியைச் சேர்ந்த 79 வயது உசைன் என்பவர் சவுதி அரேபியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

 

சளி, காய்ச்சல் காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் கொரானா வைரஸ் காரணமாக உயிரிழந்தாரா? என்பது பற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளன.


Leave a Reply