கொரானோ குறித்த அச்சம் வேண்டாம்..! தேவையின்றி வெளியூர் செல்வதை தவிர்க்க வேண்டும்..!! தமிழக சுகாதார செயலாளர் அறிவுரை!!

கொரானோ குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அதே வேளையில் தேவையின்றி வெளியூர் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

 

கொரானோ வைரஸ் அச்சுறுத்தல் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 39 பேருக்கு இந்த வைரஸ் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்திலும் 2 பேருக்கு இந்த அறிகுறி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழக சுகாதாரத் துறை கொரானோ குறித்து தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. ஓமன் நாட்டிலிருந்து ஒரு வாரம் முன் சென்னைக்கு விமானம் மூலம் வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து இது குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று டிஎம்எஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 

ஓமன் நாட்டிலிருந்து திரும்பிய வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் விமானத்தில் பயணம் செய்தவர்கள் கண்டறியப்பட்டு 59 பேருக்கு ரத்த மாதிரி சோதனை நடத்தப்பட்டதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த சிறுவனின் ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

சிறுவனுடன் விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கும் பாதிப்பு உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எனவே கொரானோ குறித்து பொது மக்கள் அச்சப்பட வேண்டாம். தேவையின்றி வெளியூர் பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும் என பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

 

மேலும் ஓமன் நாட்டிலிருந்து காஞ்சிபுரம் திரும்பிய நபருக்கு கொரானா வைரஸ் பாதித்தது உறுதியானதால் அவரின் காஞ்சிபுரம் வீட்டில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்தில் அவர் யார் யாருடன் பேசினார், சந்தித்தார் என்பதை கண்டறிந்து அவர்களையும் மருத்துவ கண்காணிப்புக்கு ஆட்படுத்தியுள்ளோம்.7நாட்களில் 22 பேருடன் அவர் பேசி பழகி உள்ளார்.

 

இதனால் 22 பேரையும் 14 நாட்கள் கண்காணிக்க 5 மருத்துவர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அருகாமையில் உள்ள வீடுகளிலும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பழனி அறிவித்துள்ளார்.


Leave a Reply