மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல் அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திமுக தொண்டர்களும் பொதுமக்களும் திரளானோர் திரளானோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய உடல் இன்று மாலை 4.45 மணிக்கு தகனம் செய்யப்படுகிறது.
திமுகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும் 43 ஆண்டுகளாக கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை அலங்கரித்தவரும், இன மான பேராசிரியர் என கட்சியினரால் அன்பாக அழைக்கப்பட்ட க.அன்பழகன் வயது மூப்பு காரணமாக உடல்நலமின்றி இன்று அதிகாலை 1 மணிக்கு காலமானார். 98 வயதான அன்பழகன் திமுகவை தொடங்கிய காலத்திலிருந்த முன்னோடித் தலைவர்களில் ஒருவர். திமுக தொடங்கிய காலத்தில் மேடைகளில் முழக்கமிட்ட தலைவர்களின் அத்தியாயம் அன்பழகனின் மறைவு மூலம் முடிவுக்கு றே கூறலாம்.
இன்று அதிகாலை அன்பழகனின் மறைவுச் செய்தி கேட்டவுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, ராசா கனிமொழி உள்ளிட்ட அப்போலோ மருத்துவமனைக்கு சென்று அன்பழகனின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவருடைய உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் கட்சியினர்,பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காலை முதலே திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தி.க. தலைவர் வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கவிஞர் வைரமுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் ரஜினி, திமுகவின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், திமுக முன்னணி தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் , திரையுலகத்தினர் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
க.அன்பழகன் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்பட பல்லேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். க.அன்பழகனின் உடல் இன்று மாலை 4 மணி அளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கீழ்ப்பாக்கம் அருகிலுள்ள வாலங்காடு மின் மயானத்தில் மாலை 4.45 மணிக்கு தகனம் செய்யப்படுகிறது.