காங்கிரஸ் எம்.பி.,க்கள் 7 பேர் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட்..! சபாநாயகர் ஓம்பிர்லா அதிரடி!!

மக்களவையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி காங்கிரஸ் எம்.பி.,க்கள் 7 பேரை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

நாடாளுமன்ற இரு அவைகளும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்விற்காக கடந்த திங்கட்கிழமை கூடின. இந்தக் கூட்டத் தொடர் ஒரு மாதம் வரை நடைபெற உள்ளது. ஆனால் கூட்டத் தொடர் தொடங்கியது முதலே, கடந்த 4 நாட்களாக அமளி துமளியாக காட்சியளிக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், டெல்லி வன்முறை விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் சபை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

 

தினமும் இரு அவைகளும் கூடினாலும் அமளி காரணமாக நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுகின்றன. மேலும் மக்களவையில் காங்கிரஸ் மற்றும் பாஜக எம்.பி.க்களிடையே மோதல் உருவாகும் சூழலும் அடிக்கடி ஏற்படுகிறது.

இதனால், எம்.பி.,க்கள் தங்கள் இருக்கையிலிருந்து எதிர் வரிசை எம்.பி.க்கள் பக்கம் செல்லக் கூடாது; மீறினால் எம்.பி.க்களை கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்யப்படுவார்கள் என மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், இன்று தற்காலிகமாக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை மேற்கொண்ட ரமாதேவி கையில் வைத்திருந்த பேப்பர்களை காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் பிடுங்கி கிழித்தெறிந்தனர்.

 

இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக தமிழகத்தின் விருதுநகர் தொகுதி எம்.பி மாணிக்கம் தாகூர் மற்றும் கவுரவ் கோகாய், பிரதாபன், பென்னி உள்ளிட்ட 7 காங்கிரஸ் எம்.பி.க்களை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார்.


Leave a Reply