--- --:--:-- --

டயானா செய்த போன் கால்! சிக்கிய கொள்ளையர்கள்!

10

வருமான வரி புலனாய்வு அலுவலகத்தில் இணை இயக்குநராக பணியாற்றும் பாரதி சென்னை நுங்கம்பாக்கத்தில் அலுவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். பாரதிக்கு பெசன்ட் நகரில் வீடு இருக்கும் நிலையில், அங்கு வசித்து வந்த அவரது பெற்றோர் கடந்த 14ம் தேதி திருச்சி புறப்பட்டு சென்றுள்ளனர். மறுநாள் காலை வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதாக பணிப்பெண் தெரிவித்துள்ளார்.

 

இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர தோடு, 40 சவரன் நகை, 2 கை கடிகாரங்கள், 35 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து நீலாங்கரை பகுதியில் அமெரிக்க தம்பதி கேரி ஸிடுவார்டு, டயானா வசித்த வீட்டில் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். வீட்டின் தரைத்தளத்தில் கேரி ஸிடுவார்டு இருந்ததால் அவரை தாக்கி கட்டி போட்டுவிட்டு கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.

 

வீட்டின் முதல் தளத்தில் இருந்த டயானா கொள்ளையர்கள் தன்னையும் தாக்க வருவதை அறிந்து சாதுர்யமாக அறை ஒன்றுக்குள் சென்று பூட்டிக்கொண்டு உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை 100க்கு புகார் செய்துள்ளார். அருகிலிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சைரன் வாகனத்துடன் சென்றபோது திருடர்கள் கொள்ளை அடிக்க முடியாமல் இரண்டு இருசக்கர வாகனங்களை விட்டு விட்டு தப்பியோடினர்.

 

திருடர்கள் விட்டு விட்டு சென்ற இருசக்கர வாகனங்களை ஆய்வு செய்த போலீசார் பெருநகரில் வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் கைவரிசை காட்டி அவர்களும் இதே கொள்ளையர்கள் என்பதை அறிந்தனர். பாரதியின் பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு திருச்சி செல்வதற்காக ஆட்டோவில் எழும்பூர் சென்ற போது, அவர்களை பின் தொடர்ந்து சென்ற இருசக்கர வாகனங்கள் அவை என்பதை சிசிடிவி பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வன்னி கருப்பு மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுரேந்தரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க நகைகள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள சிவகங்கையை சேர்ந்த சுகுமார் மற்றும் முத்துபாண்டி ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

 

கைது செய்யப்பட்ட நபர்கள் தொடர் கொள்ளை சம்பவங்களை நிகழ்த்தி வந்தவர்கள் என்பததோடு அவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகளும் உள்ளன. சமயோசிதமாக செயல்பட்ட அமெரிக்க பெண்ணின் சாதுரியம் தொடர் கொள்ளையர்களை பிடிக்க பேருதவியாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon