நியூசி.,க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி : முதல் இன்னிங்சில் 242 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலாவது இன்னிங்சில் இந்தியா 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது .

 

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா. இதற்கு பதிலடியாக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மூன்றையும் வென்று இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து .

 

தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. இந்நிலையில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் இன்று தொடங்கியது. பாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்தியா பேட்டிங் செய்தது. மயங்க் அகர்வால் 7 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக்கட்டினார்.

 

பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்தார் புஜாரா . இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சை சமாளித்து ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். அரைசதம் கடந்த பிரித்வி 54 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார் தொடர்ந்து வந்த கேப்டன் கோலி 3 ரன்களில் அவுட் ஆகி இந்த முறையும் ஏமாற்றம் தந்தார். அவரை அடுத்து வந்த ரஹானேவும் 7 ரன்களில் வெளியேறினார்.

 

பின்னர், புஜாராவுடன் ஜோடி சேர்ந்த விஹாரி நிலைத்து ஆட, இருவரும் இந்திய அணியின் ரன் எண்ணிக்கையை ஓரளவு உயர்த்தினர். ஆனால் அரைசதம் கடந்த புஜாராவும் (54) விஹாரியும் (55) அடுத்தடுத்து அவுட்டாக இந்திய அணிக்கு சரிவு தொடங்கியது. ரிஷப் பண்ட் (12) ஜடேஜா (9) உமேஷ் (0) ஷமி (16) ஆகியோர் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்து வெளியேற இந்திய அணி, 63 ஓவர்களில் 242 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் ஜெமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சவுத்தி, போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து நிழசிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.

 

இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் இந்த தொடரில் நியூசிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற இக்கட்டில் இந்தியா உள்ளது. ஆனால் முதல் இன்னிங்சில் குறைவான ரன்களே எடுத்துள்ள இந்தியா, தோல்வியை தவிர்க்க வே போராடவேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply