டெல்லியில் இன்றும் கல்வீச்சு சம்பவங்களால் தொடர்ந்து பதற்றம்..! பலி எண்ணிக்கை 5 ஆனது!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.இன்றும் பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்று பதற்றம் நீடிக்கிறது.வன்முறை சம்பவங்களால் பலியானேர் எண்ணிக்கையும் 5 ஆக உயர்ந்துள்ள நிலையில், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்பட கட்சி பாகுபாடின்றி அனைத்து தலைவர்களும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து, கடந்த 3 நாட்களாக வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகள் வன்முறைக் களமாக மாறியுள்ளன. போராட்டக்காரர்களுக்கு எதிராக மற்றொரு தரப்பினர் ஆவேசம் காட்ட நேற்று மோதல் வெடித்தது. கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு வன்முறை வெடிக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் மேலும் அதிகரித்தது. இதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் பொதுமக்கள் தரப்பிலும் 4 பேர் பலியாகி, பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இன்றும் வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மாஜ்பூர், சீலாம்பூர் பகுதிகளில் கல்வீச்சு சம்பவங்கள் தொடர்வதால் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் டெல்லியில் தங்கியுள்ள நிலையில், வன்முறை சம்பவங்கள் தொடர்வது மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் பெரும் தலைவலியாகியுள்ளது.போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.

 

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும், கலவரம் வெடித்துள்ள பகுதிகளைச் சேர்ந்த தனது கட்சி எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்தி போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசித்தார். அத்துடன் அனைத்து தரப்பினரும் அமைதி காக்குமாறும் கெஜ்ரிவால் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேபோல காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Leave a Reply