--- --:--:-- --

டி20 தொடரில் “ஒயிட்வாஷ்” ஆன நியூசிலாந்து..! ஒரு நாள் தொடரில் 3-0 என இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது!!

12

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் 5-0 என ஒயிட்வாஷ் ஆன நியூசிலாந்து, ஒரு நாள் தொடரில் 3-0 என வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து பழி தீர்த்துள்ளது.

 

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் ஆடியது. இதில் வரிசையாக 5 போட்டிகளிலும் வென்று, நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து, 5-0 என தொடரை கைப்பற்றி இந்தியா சாதித்திருந்தது. இது டி20 போட்டிகளில் பெரும் சாதனையாகவும் பார்க்கப்பட்டது.

 

இந்த தோல்வியால் துவண்டு போயிருந்த நியூசிலாந்து, அடுத்து நடைபெற்ற 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் எழுச்சி பெற்று விட்டது என்றே கூறலாம். டி20 தோல்விக்கு பழிக்குப் பழி வாங்குவது போல் முதல் இரு ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றியை ருசித்தது. இன்று 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மவுண்ட் மாங்கானுவில் இன்று நடை பெற்றது.இதில் வெற்றி பெற்றால் 3 – 0 என இந்தியாவை ஒயிட்வாஷ் செய்து தொடரை முழுமையாக கைப்பற்றி, இந்தியாவை பழி தீர்க்க கணக்குப் போட்டது நியூசிலாந்து அணி .

 

டாஸ் வென்ற நியூசி., அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு இந்தப் போட்டியிலும் ஓபனிங் மோசமாக அமைந்தது. மயங்க் அகர்வால் 1 ரன்னில் நடையைக் காட்டி, அடுத்து வந்த கோஹ்லி (9) இம்முறையும் ஏமாற்றினார். பிரித்வி ஷாவும் 40 ரன்னில் அவுட்டாக, ஸ்ரேயாஸ் ஐயர் – லோகேஷ் ராகுல் ஜோடி அபாரமாக கூட்டணி அமைத்து இந்திய அணியின் சரிவை மீட்டனர். லோகேஷ் (112) சதம் கடந்தார்.ஸ்ரேயாஸ் 62 ரன்கள் எடுக்க 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 296 ரன்கள் சேர்த்தது.

 

அடுத்து ஆடிய நியூசிலாந்தோ அதிரடி காட்டி, 47.1 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்களை எட்டி, வெற்றியை பதிவு செய்தது. இதனால் டி20 தொடரில் ஒயிட்வாஷ் செய்த இந்தியாவுக்கு ஒரு நாள் தொடரில் திருப்பி பதிலடி கொடுத்து நியூசிலாந்து பழி தீர்த்தது.அத்துடன் 31 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் தொடரில் முழுமையாக தோல்வி கண்டு மோசமான சாதனை படைத்தது இந்தியா.

 

அடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடை பெற உள்ளது. முதல் டெஸ்ட் வரும் 21-ந் தேதி தொடங்குகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon