திருப்பூரில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் குப்பைகளை கொட்டி தரம் பிரிப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்த் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஊருக்கு வெளியே இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட 25-வது வார்டு பகுதி 15 வேலம்பாளையம். இங்கு ஊரின் நடுவே மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை கொட்டி தரம் பிரிக்கும் எந்திரம் மூலம் தரம் பிரிக்கின்றனர்.
கடந்த ஒரு மாதமாக இப்படி இங்கு குப்பை கொட்டுவதால் ஈக்கள், கொசுக்கள் தொல்லை அதிகரித்து துர்நாற்றம் வீசுகிறது . பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் அருகே இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுவதால், பள்ளி செல்லும் சிறுவர்களும், பொது மக்களும் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் இத்திட்டத்தை ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக செயல்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக திருப்பூர் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பூர் காலேஜ் ரோடு,அணைப்பாளையம் செக்போஸ்ட் அருகே பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.