5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கிடையாது..! கடும் எதிர்ப்பால் பின் வாங்கியது தமிழக அரசு!!

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படாது என்றும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

கடந்த ஆண்டு பள்ளிக் கல்வியில்,மத்திய அரசு கொண்டு வந்த சீர்திருத்தப் படி நாடு முழுவதும்5, மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. சிறு வயது மாணவர்களை பொதுத் தேர்வு என கட்டாயப்படுத்துவது, மாணவர்களின் மனநிலையை பாதிக்கும். கல்வியை தொடர முடியாமல் இடையிலேயே பள்ளியில் இருந்து வெளியேறச் செய்யும் திட்டம் இது என்று எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால்,இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வைஅறிவிக்காத நிலையில், முதல் மாநிலமாக தமிழக அரசு மட்டும் பொதுத் தேர்வை அறிவித்ததற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் பொதுத் தேர்வுக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.இந்த வழக்கில், பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் அவர்கள் நிலை என்ன? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை உயர்நீதிமன்றமும் எழுப்பியது.

 

இந்நிலையில், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கைகள் அடிப்படையில், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த பின் வாங்கலால், பொதுத் தேர்வு பீதியில் இருந்த 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Leave a Reply