தமிழ்நாடு வீராங்கனை துளசிமதி வெள்ளி வென்று அசத்தல்!
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். 23 தங்கம், 30 வெள்ளி, 42 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 5-வது இடத்திலும் உள்ளது. குறிப்பாக நேற்று (அக். 22) மட்டும் இந்தியா ஏழு தங்கம் வென்றது.
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் பதக்க வேட்டையைத் தொடங்கியது இந்தியா. தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் இன்றைய வேட்டையைத் தொடங்கி வைத்தார். பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்திற்காக விளையாடிய துளசிமதி சீனாவின் கியுக்சியா யாங்கை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டார்.
மொத்தம் இரண்டு செட்கள் நடந்த போட்டியில் சீன வீராங்கனை Yang Qiuxia-வுடன் 18-21, 11-21 என துளசிமதி போராடித் தோல்வியுற்றார். தங்கம் வெல்லும் வாய்ப்பு கைநழுவினாலும் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
முன்னதாக, பாரா பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் அடங்கிய மகளிர் அணி சீனாவை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-19, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதன் மூலம், துளசிமதி முருகேசன் மற்றும் மனாஸி ஜோஷி இணைக்குப் பதக்கம் உறுதியானது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





