திருச்சி அருகே புலி வளத்தை சேர்ந்த சிராஜூநிஷா என்பவரின் தம்பி முகம்மது சகாரியா. ஒரு பெண்ணை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மனைவியை கைவிட்டு வேறொரு பெண்ணுடன் அவர் தலைமறைவானதாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.
காதல் திருமணம் என்பதால் அந்தப் பெண்ணுடன் சிராஜூநிஷாவிற்கு பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்படும் நிலையில், தம்பியை காணவில்லை என்று அவரும், கணவரை காணவில்லை என பெண்ணும் தனித்தனியே புலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இவர்களது குடும்ப பஞ்சாயத்தை விசாரித்து வந்த புலிவலம் காவல் நிலைய தலைமைக் காவலர் ராமருக்கும் அந்தப் பெண்ணுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. தலைமை காவலருக்கும், கணவரை பிரிந்த அந்த பெண்ணுக்குமான நெருக்கத்தை அறிந்துகொண்ட சிராஜூநிஷா அவர்களை கையும் களவுமாக பிடிக்க காத்திருந்தார்.
சனிக்கிழமை நள்ளிரவு பெண்ணின் வீட்டு வாசலில் ராமரின் இருசக்கர வாகனம் இருப்பதை பார்த்த சிராஜூநிஷா உடனடியாக சென்று அந்த வீட்டை பூட்டிவிட்டு உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். உறவினர்கள் முன்னிலையில் கதவைத்திறந்து கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். இந்த தகவலை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுள் அக் ராமரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
கணவரை காணவில்லை என்று வந்தப் பெண்ணின் நிலையை சாதகமாக்கிக் அவருக்கு கணவன் போலவே எண்ணிய காவலர் காவல்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.