உள்ளாட்சித்துறைகளுக்கு தேவையான நிதியினை ஒதுக்கி தர தயார் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி.
ஊரக உள்ளாட்சித்துறையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான ஒருநாள் அறிமுக பயிற்சி முகாம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து துவக்கி வைத்தார்.அப்போது,அவர் பேசிய பொழுது கிராம ஊராட்சிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியதாகவும்,அதே போல் தற்போது ஊராட்சிகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கி தரப்படும் எனவும்,இதுவரை உள்ளாட்சித்துறைக்கென சாதனை புரிந்ததற்காக மத்திய அரசிடம் இருந்து 104 விருதுகள் வாங்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

மேலும்,சுகாதாரம் என்பது மிக முக்கியமானது.அதனை மேம்படுத்தவும்,தேவையான தடுப்பு நடவடிக்கைகளையும் தற்போது பதவியேற்றுள்ள ஊராட்சி தலைவர்கள் எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.முழு ஈடுபாட்டோடு பணியாற்ற வேண்டும் எனவும்,மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முழு கவனத்துடனும் செயல்பட வேண்டும் எனவும் பேசினார்.
முகாமில் அரசியலமைப்பு ஆணைகள்,பொறுப்புகள்,உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து புதிதாக பதவியேற்றுள்ள ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
முடிவில் புதிதாக பதவியேற்றுள்ள ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கப்பட்டது.
விழாவில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உட்பட எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் உட்பட கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் புதிதாக பதவியேற்றுக்கொண்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




