அம்மா ஆட்சி என்னாச்சி..? எடப்பாடி நடத்துவது ‘ஆன்மீக ஆட்சியாம்..!! அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சால் பரபரப்பு!!

ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வர் எடப்பாடி முதல் ஒட்டுமொத்த அதிமுக அமைச்சர்களும் அம்மா ஆட்சி.. அம்மா ஆட்சி.. என்றே உச்சரித்து வருகின்றனர். திடீரென அதிமுகவினர் அனைவரும் ஆன்மீகவாதிகள்.. ஆன்மீக செம்மல்கள்.. எடப்பாடி ஆட்சியும் ஆன்மீக ஆட்சி தான் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளது பரபரப்பாகி உள்ளது.

 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் பகீர் ரகமாகத் தான் உள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் அடிக்கும் இதில் உச்சகட்டம். திடீரென மோடி எங்க டாடி என்பார். மேலே இருக்கிறவன் பார்த்துக்கொள்வான் என்பார்.பாஜகவுக்கு எதிராக யாராவது பேசினால் நாக்கை அறுப்பேன் என்பார். இப்படி அடிக்கடி பேசி பகீர் கிளப்புவதில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி யாரும் மிஞ்ச முடியாது.

தற்போது பெரியார் குறித்து ரஜினி பேசியது சர்ச்சையாகி தமிழகமே பரபரத்து கிடக்கிறது. ரஜினிக்கு ஆதரவாக பாஜகவினரும், இந்து அமைப்பினரும் குரல் கொடுக்க, பெரியார் வழி தொண்டர்கள் ரஜினிக்கு எதிராக கொந்தளிப்பில் உள்ளனர்.

 

இந்நிலையில் ஆன்மீகத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி உள்ளார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில், நெற்றி நிறைய விபூதி, குங்குமத்துடன் பேசிய அவர், ஆன்மீகத்திற்கு கொடுத்த விளக்கம் கொஞ்சநஞ்சமல்ல. இங்கே இருக்கிற எங்களைப் பாருங்கள்.

அதிமுகவினர் அனைவரும் ஆன்மிகச் செம்மல்கள். ஆன்மீகவாதிகள். ஆன்மீகம் பெருகினால்தான் நாட்டில் கலவரம் இல்லாமல் இருக்கும். ஜாதிக்கலவரம், மதக்கலவரம் ஏற்படாது. எம்ஜிஆர் நடத்தியது ஆன்மீக ஆட்சிதான்.அம்மா நடத்தியதும் ஆன்மீக ஆட்சிதான். இப்போது எடப்பாடி பழனிச்சாமி நடத்துவதும் ஆன்மீக ஆட்சிதான் என்று ஆன்மீகத்தை தலையில் வைத்துக் கொண்டாடாத குறையாக ராஜேந்திரபாலாஜி பேசினார்.

 

ஜெயலலிதா மறைவுக்குப்பின் கடந்த 3 ஆண்டுகளாக மூச்சுக்கு முன்னூறு தடவை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா ஆட்சி.. அம்மா ஆட்சி.. என்று முதல்வர் முதல் அமைச்சர்கள் அனைவரும் கூறி வந்தனர். இந்நிலையில் திடீரென பிளேட்டை திருப்பிப் போட்டு ஆன்மீக ஆட்சி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply