SI கொலை வழக்கு – 10 நாட்கள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் அரிவாளால் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அப்துல் சமீம் மற்றும் தஃப்விக் ஆகியோரை கர்நாடக மாநிலம் உடுப்பியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

 

பாளையங்கோட்டை சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த இருவரும் மூன்று நாட்கள் காவல் முடிந்து திங்கட்கிழமை நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். போலீஸார் தரப்பில் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க 28 நாட்கள் கேட்டு மனு அளிக்கப்பட்டது.

 

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் கஸ்டடியில் பாதுகாப்பு இருக்காது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படாததால் அவர்களை கஸ்டடியில் எடுக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி உத்தரவை செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு ஒத்திவைத்தார். அதன்படி இரண்டாவது நாளாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் 10 நாட்கள் காவலில் விசாரிக்க போலீசார் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டது.


Leave a Reply