இப்படியெல்லாமா நடக்கும்..? கெஜ்ரிவாலை அலறவிட்ட சுயேட்சைகள்..! பாஜகவின் சதி தான் காரணமா..?

டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 8-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும் பாஜக, டெல்லியில் பல முறை கோலோச்சிய காங்கிரஸ் ஆகியவை இடையே மும்முனைப் போட்டி நிலவினாலும், கெஜ்ரிவாலே மீண்டும் முதல்வராக வாய்ப்பு என்கின்றன கருத்துக் கணிப்புகள்.

 

70 தொகுதிகளில் பிப்ரவரி 8-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலில் போட்டியிட, வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்று தான் கடைசி நாளாகும்.புதுடெல்லி தொகுதியில் முதல்வர் கெஜ்ரிவால் இம்முறை போட்டியிடுகிறார். வேட்பு மனுத்தாக்கல் செய்ய நேற்றே ஊர்வலமாக சென்றார் கெஜ்ரிவால் .திறந்த ஜீப்பில் ஊர்வலமாகச் சென்ற அவருக்கு வழி நெடுகிலும் தடபுடல் வரவேற்பு.

 

இந்த வரவேற்பில் பூரித்துப் போன கெஜ்ரிவால் நேரம் கடந்து போனதை கவனிக்கத் தவறிவிட்டார் போலும். தேர்தல் அதிகாரி அலுவலகம் சென்ற போது நேரம் மாலை 3.16 மணி. வேட்பு மனுத்தாக்கலுக்கான நேரம் 3 மணிக்கே முடிந்து விட்டதால் அலுவலக பூட்டு தான் அவரை வரவேற்றது. இதனால் நொந்து போன கெஜ்ரிவால், நாளை (இன்று) அவகாசம் இருப்பதை நினைவு கூர்ந்து, சீக்கிரத்தில் வந்து மனு தாக்கல் செய்ய வேண்டும் என தனக்குத்தானே சமாதானம் செய்து புறப்பட்டார்.

 

இன்று காலை 11 மணிக்கே, வேட்பு மனுத் தாக்கல் செய்ய ஆதரவாளர்களுடன் நேராக தேர்தல் அலுவலகம் சென்றார் கெஜ்ரிவால் .அலுவலகம் முன் பார்த்தால் ஏகப்பட்ட கூட்டம். என்னவென்று விசாரித்த போதுதான் கெஜ்ரிவாலுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. எல்லாருமே சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்ய வந்தவர்களாம். இப்படி கூறிக் கொண்டு 100-க்கும் மேற்பட்டவர்கள் வரிசை கட்டி நிற்க, அதிர்ச்சியில் உறைந்து போன கெஜ்ரிவால் அவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டி வந்தது.

 

கடைசியில் மாலை 3 மணி ஆனபோது தாக்கலுக்கான நேரம் முடிந்தது. தேர்தல் விதிப்படி கடைசி நேரத்தில் வரிசையில் நிற்போருக்கு டோக்கன் வழங்கி எந்நேரமானாலும் அவர்களிடம் வேட்பு மனு வாங்க வேண்டும். அதன்படி கெஜ்ரிவாலுக்கு 45-ம் எண் டோக்கன் வழங்கப்பட்டு அலுவலக அறைக்குள் அமர வைக்கப்பட்டார். எப்படியும் தாம் வேட்பு மனு செய்ய இரவாகி விடும் என்பதை புரிந்து கொண்ட கெஜ்ரிவால் ஒரு டுவீட் போட்டார்.

அதில், வேட்பு மனுத்தாக்கலுக்காக காத்திருக்கிறேன். எனக்கு முன் ஏராளமான பேர் வேட்பு மனுத்தாக்கலுக்கு காத்துள்ளனர். என்னுடைய டோக்கன் எண்.45. ஜனநாயக தேர்தல் திருவிழாவில் இவ்வளவு பேர் பங்கேற்பதை நினைத்து பெருமை அடைகிறேன் என (வேதனையை வெளியில் கூற முடியாமல்) பதிவிட்டிருந்தார்.

 

ஒரு வழியாக மாலை 6.30 மணிக்குத் தான் கெஜ்ரிவால் வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டு வெளியே வந்தார். கடைசியில் பார்த்தால் கெஜ்ரிவாலை நோகடிக்க வேண்டும் என்றே திட்டமிட்டு சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. கெஜ்ரிவாலுக்கு முன் வேட்பு மனுத்தாக்கலுக்கு வரிசையில் நின்ற பலரும் போலி ஆசாமிகள் என்றும், அவர்களை முன்மொழியக் கூட ஆட்களை அழைத்து வராமல் பெயருக்கு வரிசையில் நின்று வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது தெரிய வந்தது. இதன் பின்னணியில் பாஜகவின் மாபெரும் சதி இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

 

கெஜ்ரிவால் முதல்வராக பதவி வகித்த இந்த 5 வருடங்களில் பந்தா இல்லாமலே வலம் வந்தார். இதனால் பொது இடங்களில் அவர் மீது செருப்பு வீசியது, முகத்தில் மையை ஊற்றியது கடைசியில் ஒரு இளைஞர் கன்னத்தில் அறை விட்டது போன்ற பல அவமானங்களை கெஜ்ரிவால் சந்தித்தார்.

 

ஆனால் ஒரு முதல்வர் என்று கூட பார்க்காமல் இப்படியா பல மணி நேரம் காக்க வைப்பது? அசிங்கப்படுத்துவது என டெல்லிவாசிகள் இப்போதே உச் கொட்ட ஆரம்பித்து விட்டனர். அரசியல்வாதிகளுக்கு அனுதாபம்தானே பெரிய ப்ளஸ் பாயிண்ட். எனவே இன்று பட்டது அவஸ்தை என்றாலும், மக்களிடம் கிடைத்த அனுதாபம் கெஜ்ரிவாலுக்கு பெரும் வெற்றியைத் தந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.


Leave a Reply