காவி உடையில் வள்ளுவர் படத்தை வெளியிட்ட குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு

திருவள்ளுவருக்கு காவியுடை அணிவித்து தமிழக பாஜக பதிவிட்ட ட்வீட் சமீபத்தில் பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டதையொட்டி குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு டுவிட்டரில் ஒரு வாழ்த்துச் செய்தியை பதிவிட்டார்.

 

திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து சிறந்த தமிழ்க் கவிஞரும், தத்துவரும், புனிதமான திருவள்ளுவரை அவரது பிறந்த நாளை நினைவு கூறுகிறேன் என குறிப்பிட்டிருந்தார் வெங்கையாநாயுடு. ஆனால் காவி உடையில் இருந்த திருவள்ளுவரின் படம் மீண்டும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது.

 

திருவள்ளுவரை குறிக்கும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ படம் உள்ள நிலையில், அதை பயன்படுத்தாமல் ஏன் காவி உடை அணிந்த திருவள்ளுவரை பயன்படுத்தினீர்கள் என பலரும் ட்விட்டரில் கேள்வி எழுப்பினர். இந்த பிரச்சனை குறித்து டுவிட்டரில் கேள்வி எழுப்பிய தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் சர்ச்சைக்குரிய திருவள்ளுவர் படத்தை நீக்குமாறு வெங்கைய நாயுடுவை வலியுறுத்தினார்.

தொடர்ந்த எதிர்ப்புகளால் உடனடியாக அந்த பதிவை நீக்கிய வெங்கையா நாயுடு வெள்ளை உடையில் இருக்கும் திருவள்ளுவரின் அதிகாரபூர்வ படத்தை பகிர்ந்து மீண்டும் வாழ்த்துச் செய்தியை பதிவிதிட்டார். அலுவலக ஊழியர் ஒருவர் பதிவிட்டதாகவும், தவறை சுட்டிக் காட்டியதும் திருத்திக் கொள்ளப்பட்டதாகவும் வெங்கையா நாயுடுவின் டுவிட்டர் பக்கத்தில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

 

அதேநேரம் திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவரின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரமும் பரவலான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.


Leave a Reply