தமிழ் சின்னத்திரையில் வில்லி வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெயஸ்ரீ. இவருக்கு முதல் திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விவாகரத்து பெற்றார். பின்னர் அவர் சின்னத்திரை நடிகரான ஈஸ்வர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இல்லற வாழ்க்கையை இனிமையாக சென்று கொண்டிருந்த வேளையில், மற்றொரு சின்னத்திரை நடிகையால் தம்பதிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. நடிகை ஜெயஸ்ரீயின் கணவரான ஈஸ்வருக்கும், சின்னத்திரை நடிகை மகாலட்சுமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக ஜெயஸ்ரீ பரபரப்பு புகார் தெரிவித்தார். மஹாலக்ஷ்மி உடனான உறவை கைவிடுமாறு தாம் ஈஸ்வரை கண்டிப்பதாகவும், இதனால் அவர் தம்மை அடித்துத் துன்புறுத்தியதாகவும் தெரிவித்தார்.
விவாகரத்து கேட்டு ஈஸ்வர் துன்புறுத்தியதாகவும் கூறிய ஜெயஸ்ரீ மது மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையாகி ஈஸ்வரர் தமது நகைகள், பணத்தை சூதாடி இழந்ததாக தெரிவித்தார். உச்சபட்சமாக தமது மக்களிடமும் அவர் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் ஜெயஸ்ரீ புகார் அளித்தார்.
இதனால் நடிகர் ஈஸ்வர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வர் ஜெயஸ்ரீ தன் மீது பொய் புகார் அளித்ததாகவும் நடிகை மகாலட்சுமியின் கணவர் அணில் என்பவரின் தூண்டுதலின் பேரில் ஜெயஸ்ரீ செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். ஈஸ்வரின் குடும்ப பிரச்சினையில் தேவையில்லாமல் தன் மீது அவதூறு பரப்பபடுவதாகவும், ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ தமக்கு தங்கை போன்றவர் என்று மகாலட்சுமியின் கணவர் அணில் விளக்கமளித்தார்.
இந்த விவகாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈஸ்வரால்ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனியாக வசித்து வந்த ஜெயஸ்ரீ தமது தோழி ஒருவருக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.
பின்னர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.