“மு.க.ஸ்டாலின் முதல்வராகக் கூடாது என திமுகவிலேயே ஒரு கும்பல் சதி”! துரைமுருகனுக்கு ‘ஆப்பு’ வைக்கும் காங்கிரசார்!!

திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் போனால் போகட்டும்; எங்களுக்கு ஒன்றும் நட்டமில்லை என்று கூறிய துரைமுருகனுக்கு காங்கிரசார் வரிசை கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில் விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் ஒரு படி மேலே போய், மு.க.ஸ்டாலின் முதல்வராகி விடக் கூடாது என்று திமுக விலேயே ஒரு கும்பல் செயல்படுவதாகக் கூறி, துரைமுருகனுக்கு ஆப்பு வைப்பது போல் மறைமுகமாக சாடி திமுகவுக்குள் கலகமூட்டியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழகத்தில் திமுக-காங்., இடையிலான கூட்டணியில் விரிசல் பெரிதாக வெடித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில், கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை என திமுகவுக்கு எதிராக தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை விட்டது தான் இந்த விரிசலுக்கு பிள்ளையார் சுழி. இதற்கு பழி தீர்க்கும் வகையில் டெல்லியில் சோனியா தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. இந்த புறக்கணிப்புக்கு காரணம், கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கை தான். பிரச்னை இருந்தால் மு.க.ஸ்டாலினிடம் நேரில் கூறியிருக்கலாம். அதை விடுத்து அறிக்கை விட்டால் எப்படி..? சினி கூட்டணி தொடருமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும் என டி.ஆர்.பாலு எம்.பி., கூலாக கூறியிருந்தார்.

 

இதைத் தொடர்ந்து திமுக மூத்த தலைவரும், பொருளாளருமான துரைமுருகன் கூறியது தான் காங்கிரசாரை கொந்தளிக்கச் செய்து விட்டது.கூட்டணியை விட்டு காங்கிரஸ் போனால் போகட்டும். ஓட்டே இல்லாத கட்சியால் திமுகவுக்கு நட்டமில்லை என அவருக்கே உரிய பாணியில் நக்கலடித்ததால் காங்கிரசார் வரிசை கட்டி பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். வேலூர்ல உங்க மகன் எம்.பி., தேர்தல்ல நின்ற போது இந்த ஞானம் எங்கே போனது? என்று கார்த்தி சிதம்பரம் நேற்றே சுருக்கென டுவிட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.

 

இன்றோ காங்கிரசின் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூர், கே.ஜெயக்குமார் மற்றும் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்டோர் துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.காங்கிரசின் வரலாறு தெரியாமல் துரைமுருகன் பேசக்கூடாது. கூட்டணி தர்மத்தை காங்கிரஸ் ஒருபோதும் மீறியதில்லை. கூட்டணியில் இல்லாத போதும் கூட கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்க ஆதரவு தந்தவர் சோனியா .2011-ல் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டு வைத்தால் தோற்போம் என்று தெரியும். ஆனாலும் ஜெயலலிதா அழைப்பு விடுத்தும் அணி மாறாமல் கூட்டணி தர்மத்துக்காக திமுகவுடன் கூட்டணியை தொடர்ந்தோம். இதெல்லாம் தெரியாமல் துரைமுருகன் பேசுகிறார். முதலில் கூட்டணி குறித்த காங்கிரசின் வரலாற்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற மாணிக்கம் தாகூர், மு.க.ஸ்டாலின் முதல்வராகி விடக் கூடாது என திமுகவுக்குள்ளே ஒரு கூட்டம் செயல்படுகிறது என கொளுத்திப் போட்டுள்ளார். துரைமுருகன் பெயரைக் குறிப்பிடாமல் மாணிக்கம் தாகூர் இப்படிக் கூறியுள்ளது திமுகவுக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

 

இது போல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்.பி.யான கே.ஜெயக்குமாரும், தலை இருக்க வால் ஆடக்கூடாது என துரைமுருகனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

காங்கிரசின் செயல் தலைவர்களில் ஒருவரான மோகன் குமாரமங்கலமோ, 2006-ல் மெஜாரிட்டி இல்லாத திமுக அரசை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தாங்கிப் பிடித்தது காங்கிரஸ் தான். துரைமுருகன் பொதுப்பணித் துறை அமைச்சரானதும் காங்கிரஸ் தயவால் தான். அவருடைய மகன் கதிர் ஆனந்த் வேலூரில் ஜெயிக்க காங்கிரசின் தயவு தேவைப்பட்டதை துரைமுருகன் மறந்துவிட்டாரா? அல்லது ஞாபக சக்தி குறைந்து விட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

காங்கிரஸ் தரப்பில் இப்படியெல்லாம் வரிசை கட்டி அக் கட்சியின் இளம் தலைவர்கள் பலரும் பதிலடி கொடுப்பார்கள் என்று துரைமுருகன் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.


Leave a Reply