புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்து டோக்கன் பெறாமல், ஜல்லிக்கட்டில் பங்கேற்க 100-க்கும் மேற்பட்ட காளைகளை கொண்டு வந்தவர்களால் சலசலப்பு ஏற்பட, போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் நாளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோர் மாடுபிடி வீரர்களுடன் உறுதி மொழி ஏற்று, ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் 700 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. காளைகளை அடக்க 900-க்கும் மேற்பட்ட இளம் காளையர்கள் பதிவு செய்துள்ளதால், ஒரு மணி நேரத்துக்கு 100 பேர் வீதம் என களத்தில் இறக்கி விடப்படுகின்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கும், களத்தில் துள்ளி விளையாடி யாருக்கும் பிடிபடாமல் கெத்து காட்டும் சிறந்த ஜல்லிக் கட்டு காளையின் உரிமையாளருக்கும் பரிசாக கார் வழங்கப்படுகிறது. அத்துடன் மோட்டார் பைக், தங்கம், வெள்ளி காசுகள்,சைக்கிள், பீரோ, கட்டில் என ஏராளமான பரிசுகளும் வழங்கப்படுகிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கும் முன், முன் பதிவு செய்யாத 100-க்கும் மேற்பட்ட காளைகளை குறுக்கு வழியில் அதன் உரிமையாளர்கள் பங்கேற்கச் செய்ய முயன்றதால், வாடிவாசல் பின் பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தியதால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.