என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார். அப்படி நிரூபிக்காவிட்டால் நீங்கள் ஆளுநர் பதவியை துறக்கத் தயாரா? என புதுச்சேரி ஆளுநருக்கு அம்மாநில முதல்வர் நாராயணசாமி பகிரங்கமாக சவால் விட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில்
அம்மாநில ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி முதல்வர் நாராயணசாமிக்கு குடைச்சல் கொடுப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் கிரண்பேடி. இவர்களின் மோதல் விவகாரம் உயர் நீதிமன்ற வழக்கு வரை சென்றுவிட்டது.
புதுச்சேரியில் ரேசன் கடைகளில் அரிசி வழங்குவதற்குப் பதிலாக, பணமாக வழங்க கிரண்பேடி உத்தரவிட்டார். தரமில்லாத அரிசியை கொள்முதல் செய்து, ஊழல் செய்கின்றனர் என்று கூறி கிரண்பேடி உத்தரவிட, அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இப்போது சொந்தக் கட்சி எம்எல்ஏ ஒருவரே நாராயணசாமிக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துள்ளார்.காங்கிரஸ் எம்எல்ஏவான தனவேலு என்பவர், முதல்வர் நாராயணசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அத்துடன் ஆளுநர் கிரண் பேடியையும் சந்தித்து நாராயணசாமி மீது புகார்ப் பட்டியலை வாசித்துள்ளார்.
ஏற்கனவே நாராயணசாமியை பழி வாங்க காத்திருக்கும் கிரண்பேடிக்கு இது போதாதா? உடனே ஆளுநர் அலுவலகம் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டார் கிரண்பேடி. அதில்,காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு தம்மை சந்தித்து, முதல்வர் நாராயணசாமி மற்றும் அவருடைய மகன் மீது நில அபகரிப்பு புகார் உள்பட ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதாகவும், உரிய ஆதாரங்களுடன் சிபிஐ வசம் புகார் செய்யும்படி தாம் அறிவுறுத்தியதாகவும் கிரண்பேடி குறிப்பிட்டிருந்தார்.
ஆளுநர் கிரண்பேடியின் இந்த அறிக்கை முதல்வர் நாராயணசாமியை கொந்தளிக்கச் செய்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு கூறிய குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. வாய் மொழியாக அவர் கூறிய பொய் புகாரை, ஆளுநர் கிரண்பேடி செய்தியாக அறிக்கை மூலம் எப்படி வெளியிடலாம். இருந்தாலும் நான் சவாலாகவே இந்தப் பிரச்னையை எடுத்துக் கொள்கிறேன்.என் மீதான ஊழல் புகார்களை நிரூபித்தால் முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்யத் தயார்.
அப்படி நிரூபிக்கத் தவறினால் ஆளுநர் பதவியை துறந்து விட்டு புதுச்சேரி ராஜ்பவனை விட்டு வெளியேற கிரண்பேடி தயாரா? என முதல்வர் நாராயணசாமி சவால் விட்டுள்ளார். இருவருக்கும் இடையேயான இந்த விவகாரம் புதுச்சேரியில் இப்போது விஸ்வ௹பம் எடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.