சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் ஐய்யப்பா சரணமிட்டு வழிபட்டனர். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மாலையணிந்து 48 நாட்கள் விரதமிருந்து சபரிமலை சென்று ஐயப்பனை பக்தர்கள் தரிசிப்பது வழக்கம். இதையொட்டி சபரிமலையில் மகரவிளக்கு பூஜையும் நடைபெறும்.
இதன் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் தை முதல் நாளில் நடைபெறும். அதன்படி நடைபெற்ற மகர ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். பொன்னம்பலமேட்டில் தென்பட்ட மகர ஜோதியை காண புல்லுமேடு, பாஞ்சாலி மேடு, பாண்டி தாவளம் உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளிலும் பக்தர்கள் காத்திருந்தனர். காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்பட்ட ஆபரணங்கள் அடங்கிய பெட்டி சபரிமலைக்கு மாலை 6 மணியளவில் வந்தடைந்தது. இதையடுத்து ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகரவிளக்கு பூஜை தொடங்கியது.
கோவிலில் அய்யப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்ட நேரத்தில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தென்பட்டது. மகர ஜோதியாக ஐயப்பன் காட்சி தருவதாக பக்தர்களால் நம்பப்படும் நிலையில் ஜோதியை தரிசித்து ஐயப்பா சரணம் சரணம் கோஷமிட்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.






