பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 7-ந் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததுடன், இந்தியா வருமாறும் அழைப்பு விடுத்தார். இதற்கு டிரம்ப்பும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். அமெரிக்க வாழ் இந்தியர்களை கவர, தேர்தலுக்கு முன் தனது இந்தியப் பயணம் முக்கியமானது என டிரம்ப் கருதுவதாகவும் தெரிகிறது. இதனால் இரு நாட்டு தூதரக உயர் அதிகாரிகளும் டிரம்ப்பின் இந்திய பயணம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) டிரம்ப் இந்தியா வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனாலும் டிரம்ப்பின் பயணத் தேதி மற்றும் எத்தனை நாள் சுற்றுப்பயணம் என்பது முடிவாகவில்லை.
டிரம்ப்பின் இந்திய பயணத்தின் இரு நாடுகளிடையே தொழில் முதலீடு தொடர்பாகவும், இந்தியாவுக்கு எண்ணெய் இறக்குமதி செய்வது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.