அரசுக்கு எதிரான கருத்துக்கு தடையா..? காந்தியின் புத்தகம் கூட வெளியிட முடியாது..!! மதுரை எம்.பி., வெங்கடேசன் ஆதங்கம்!!

அரசுக்கு எதிரான கருத்துக்கு தடை எனில், மகாத்மா காந்தி, அம்பேத்கர், அண்ணா போன்ற யாருடைய புத்தகத்தையும் கண்காட்சியில் வைக்க முடியாத நிலை ஏற்படும் என பிரபல எழுத்தாளரும் மதுரை எம்.பி.யுமான சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் நடைபெற்று வரும் 43 -வது புத்தகக் கண்காட்சியில் தினமும் பிரபல எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த கருத்தரங்கில் ‘கீழடி ஈரடி’ சாகித்ய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான சு.வெங்கடேசன் உரையாற்ற அழைக்கப் பட்டிருந்தார். மேடையில் பேச எழுந்த வெங்கடேசன், தமக்கு கொடுத்த தலைப்பில் உரையாற்றவில்லை. மாறாக,புத்தகக் கண்காட்சியில் அரசுக்கு எதிரான ஊழல் புகார்களை பட்டியலிடும் புத்தகங்கள் விற்பனைக்கு வைத்திருந்த மூத்த பத்திரிகையாளர் அன்பழகனின் அரங்கத்தை காலி செய்ததற்கும், அவரை கைது செய்தததற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது கருத்தை மட்டும் பதிவிட்டு அமர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

வெங்கடேசன் எம்.பி., பேசியதாவது:சென்னை புத்தகக் காட்சிக்கு வருவது என்பது எப்போதுமே ஒரு கொண்டாட்ட மனநிலை. கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ச்சியாக புத்தகக் காட்சிக்கு வந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு மனவருத்தத்தோடு புத்தகக் காட்சியில் நின்றுகொண்டிருப்பது இதுதான் முதல் முறை.

 

இதுவரை இல்லாத நடைமுறைகள் இந்த ஆண்டு கொண்டுவரப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. கருப்புச் சட்டை அணிந்தவர்களை விசாரித்து உள்ளே விடுகிறார்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள். இவ்வளவு பயத்தோடு இருக்கிறார்களா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

 

இன்றைய சூழலில் பப்பாசி போன்ற அமைப்புக்கு நிறைய நிர்ப்பந்தங்கள் வரலாம். அழுத்தங்கள் வரலாம். அவற்றையெல்லாம் எதிர்கொள்வதற்கு முறையான வழிமுறைகள் உண்டு. அவற்றையெல்லாம் கடந்த வழிமுறைகளை நாம் பின்பற்றக்கூடாது.

குறிப்பாக, கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த ‘மக்கள் செய்தி மையம்’ கடை அகற்றப்பட்டதும், கடையை அகற்ற பப்பாசி அளித்துள்ள அறிக்கையும் இன்று மிகப்பெரிய விவாதத்திற்கு உள்ளாகி, மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிரான புத்தகத்தை உங்கள் கடையில் வைத்திருப்பது விதிமீறல் என்று பப்பாசி கூறியிருக்கிறது.

 

அரசுக்கு எதிரான புத்தகங்கள் வைக்கக்கூடாது என்றால் மகாத்மா காந்தியின் ஒரு புத்தகத்தைக் கூட இந்தக் கண்காட்சியில் வைக்கக்கூடாது. அண்ணல் அம்பேத்கரின் ஒரு புத்தகத்தை கூட இந்த கண்காட்சியில் வைக்க முடியாது. பேரறிஞர் அண்ணாவின் ஒரு எழுத்தைக் கூட இந்தக் கண்காட்சியில் இடம் பெயர முடியாது.

 

ஏன் சமையல் கலை புத்தகத்தைக் கூட வைத்திருக்கக்கூடாது. அதில் வெங்காயத்தைப் பற்றிய குறிப்பு இருக்கும். அது மத்திய அரசுக்கு எதிரானது. உப்புப் போட்டு சாப்பிடுவது பற்றி அந்தப் புத்தகத்தில் இருக்கக்கூடும். அது மாநில அரசுக்கு எதிரானது என்று அவர்கள் சொல்லக்கூடும்.

 

அரசுக்கு எதிரானது என்று காவல்துறை சொல்லலாம். ஒரு தெருமுனைக் கூட்டத்திற்கு அனுமதி கேட்டால் கூட, அரசை எதிர்த்துப் பேச மாட்டோம் என்று எழுதிக் கொடுங்கள் என்று காவல்துறை கேட்கும். பப்பாசி கேட்கலாமா?

 

தமிழகத்தில் பதிப்புத் துறைக்கு எவ்வளவு பெரிய மரபு இருக்கிறது! சர்ச்சைக்குரிய புத்தகங்கள் இருக்கக்கூடாது என்றால், இதோ கீழடி இருக்கிறது. அதில் இருக்கிற ஒவ்வொரு பட்டியலும் மத்திய அரசுக்கு எதிரானதுதான். ஏனென்றால் கீழடியைத் தனக்கு எதிரான ஒன்றாகத்தான் மத்திய அரசு கருதுகிறது. அகற்றி விடுவீர்களா கண்காட்சியை?

 

சமஸ்கிருதம்தான் மூத்த மொழி, தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகள் அதிலிருந்து வந்தவைதான் என்று சொல்கிறார்கள். அதை மறுத்து, கிமு ஆறாம் நூற்றாண்டிலிருந்து வரலாறு இருப்பதை கீழடி கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு படமும் சொல்கிறது. சர்ச்சைக்குரியவை என்று அவற்றை அகற்றிவிட முடியுமா?

 

தமிழகத்தின் பதிப்புத் துறைக்கு மிகப்பெரிய வரலாறு, மாண்பு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக பப்பாசி இருக்கிறது. இருக்க வேண்டும். பப்பாசிக்குப் பல நிர்ப்பந்தங்களும் அழுத்தங்களும் இருக்கலாம். அதற்காக கருத்துரிமையை, எழுத்தாளர் உரிமையை, கருத்துச் சுதந்திரத்தைக் காவு கொடுக்க முடியாது.

 

எனவே, இந்த நிகழ்வுக்கு எதிராக எனது கருத்தைப் பதிவு செய்து, இங்கு எனக்கு அளிக்கப்பட்ட “கீழடி ஈரடி” என்ற தலைப்பிலான உரையை நான் நிகழ்த்தப்போவதில்லை என்று தெரிவித்து அமர்கிறேன் என வெங்கடேசன் எம்.பி., தமது வேதனையையும் எதிர்ப்பையும் வித்தியாசமான முறையில் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply