மதுரை நகரில் பேருந்து நிலையங்களிலும், in முக்கிய இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என போனில் மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டடுள்ளது.
சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், மதுரையில் உள்ள பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்தார். இதையடுத்து மதுரை போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டது.
இதையடுத்து மதுரை பெரியார், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசாரும், வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பானது. தொடர்ந்து போலீசாரும் மதுரையின் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பதை கண்டறியும் பணியில் சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தைப்பொங்கலை முன்னிட்டு நாளை முதல் மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளும் களைகட்ட உள்ள நிலையில், வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.