ரேஷன் அட்டை தாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் தர வேண்டும் என புதுச்சேரி கிரண்பேடி உத்தரவிட்டதை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தமாகத்தான் உள்ளது. மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் புதுச்சேரி மாநிலம் யூனியன் அந்தஸ்துடன் இருப்பதால், அங்கு துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது. துணை நிலை ஆளுநரின் உத்தரவே அங்கு செல்லுபடியாகும். இதனால் ஆளுநர் கிரண்பேடி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார்.
இதனால் மாநில நிர்வாகத்தில் ஆளுநரின் குறுக்கீடு அதிகமாக இருப்பதாகவும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடை போடுகிறார் எனவும் முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருவதுடன், பல போராட்டங்களையும் நடத்திப் பார்த்தார். ஆனால் ஆளுநர் கிரண்பேடியோ மசிவதாக இல்லை. இதனால் கடந்த 4 வருடங்களாகவே இருவருக்கும் முட்டல் மோதல் தான் நீடிக்கிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் ரேசன் கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்க வேண்டாம். அதற்குப் பதிலாக பணமாகக் கொடுத்து விடலாம் என ஒரு புது உத்தரவை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்திருந்தார். இதற்கு அவர் கூறிய காரணம், ரேசன் அரிசி கொள்முதலில் பெருமளவு ஊழல் நடக்கிறது என்றும், தரமற்ற அரிசியை விநியோகிப்பதாக கூறியிருந்தார். எனவே ரேசன் கார்டுதாரர்களுக்கு அரிசிக்கான பணத்தை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு விட்டார்.
கிரண்பேடியின் உத்தரவுக்கு முதல்வர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். தற்போது இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ப தாகவும், விசாரணைக்கு பட்டியலிடுமாறும் நீதிமன்ற பதிவாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநில ஆளுநருக்கு எதிரான அம்மாநில முதல்வரே வழக்கு தொடர்ந்து, அது விசாரணைக்கும் ஏற்கப்பட்டுள்ளது புதுச்சேரி நிர்வாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.