ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலரை அதிமுகவினர் கடத்திச் சென்றதாக தொடரப்பட்ட ஹேபியஸ் கார்பஸ் வழக்கில், சம்பந்தப்பட்ட கவுன்சிலரை நாளை ஆஜர்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வரும் 11-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மறைமுகத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மாற்றுக் கட்சி மற்றும் சுயேட்சையாக வெற்றி பெற்றவர்களை கடத்துவதில் அதிமுக, திமுக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மும்முரமாக விட்டனர். இதனால் மறைமுகத் தேர்தல் வரை தங்கள் கட்சி கவுன்சிலர்களை பாதுகாக்க, ஒட்டு மொத்தமாக பேக்கப் செய்து, ரகசிய இடத்தில் தங்க வைத்துள்ளனர். அப்படியிருந்தும் பல இடங்களில் கவுன்சிலர்கள் கடத்தப்பட்டதாக புகார்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இது போல்,ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் ஒன்றியம் 8-வது வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற சாத்தையா என்பவரை வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த மறுநாளே அதிமுகவினர் கடத்திச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சாத்தையாவின் மகன் ராஜா, போலீசில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், தனது தந்தையைக் கண்டு பிடித்துத் தருமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சாத்தையா பத்திரமாக உள்ளார். அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என காவல்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதை ஏற்காத நீதிபதி, சாத்தையாவை நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும். இல்லையேல், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.ஆஜராக வேண்டும் என கண்டிப்பு காட்டினார். இதனால், கடத்தப்பட்ட திமுக கவுன்சிலர் சாத்தையாவை நாளை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜர்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு காவல்துறையினர் ஆளாகியுள்ளனர்.
முதுகுளத்தூர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தலா 4 இடங்களில் திமுக, அதிமுக ஆகியவை வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், ஒன்றியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற இரு கட்சிகளும் கவுன்சிலர்களை வளைக்க குதிரை பேரம், கடத்தல், மிரட்டல் என பல வழிகளை கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.