தர்பார் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!!

நாளை திரைக்கு வரும் ரஜினியின் தர்பார் படத்தை சிறப்புக் காட்சியாக வெளியிட 4 நாட்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள தர்பார் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீசாகிறது. ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இப்படத்தைக் காண ரசிகர்கள் பெரும் ஆவலாக உள்ள நிலையில், தமிழகத்தில் இப்படத்தை சிறப்புக் காட்சியாக திரையிட அனுமதி கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.

 

ஏனெனில், விஜய்யின் பிகில் படத்தின் சிறப்புக் காட்சியின் போது ஏற்பட்ட வன்முறையைக் காரணம் காட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தர்பார் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை என அம் மாவட்ட காவல் துறை சார்பில் முன்கூட்டியே அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைக்குமா? என்பது இன்று வரை இழுபறியாக இருந்தது. இதனால் பெரும்பாலான தியேட்டர் அதிபர்களும் தர்பார் படத்தை திரையிட தயக்கம் காட்டி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

 

இந்நிலையில், தர்பார் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டு, ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இதன்படி நாளை (9ம் தேதி) மறுநாள் 10-ம் தேதி மற்றும் பொங்கலுக்கு முந்தைய இரு நாட்களான 13, மற்றும் 14ம் தேதிகளில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


Leave a Reply