புத்தாண்டு தினத்தில் பத்து ரூபாய் மட்டுமே கட்டணமாக செலுத்தி ஒன்பது மணி நேரத்திற்கு பேருந்தில் சென்னை மாநகரை சுற்றி பார்க்கும் திட்டத்தை தமிழக சுற்றுலா துறை அறிமுகம் செய்துள்ளது.
மக்களிடையே சுற்றுலாவை பிரபலப்படுத்தும் நோக்குடன் சுற்றுலா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பத்து ரூபாய் மட்டுமே கட்டணமாக செலுத்தி சென்னை நகரை சுற்றிப் பார்க்கும் திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது. இந்த சலுகை புத்தாண்டு தினத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலில் உள்ள சுற்றுலா பொருட்காட்சி வளாகத்தில் இருந்து தொடங்கும் இந்த பயணம் மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரைவிளக்கம், பெசன்ட்நகர், அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், அறுபடை முருகன் கோவில் மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் 15 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்து ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துவிட்டால் சுற்றுலா கழக பேருந்துகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த சுற்றுலா தளத்தில் வேண்டுமானாலும் ஏறலாம், எந்த சுற்றுலா தளத்தில் வேண்டுமானாலும் இறங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவரங்களுக்கு 1 8 0 0 4 2 5 3 1 1 1 1 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் சுற்றுலா துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.