“வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி வைக்கணும்!”- உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக மீண்டும் வழக்கு!!

தமிழகத்தில் கடந்த 2016-ல் நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் ஆண்டுகளாக பல காரணங்களால் தாமதமாகி வந்தது. 2016 அக்டோபரில் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கலும் நிறைவடைந்த நிலையில், இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கால் தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்தது. தொடர்ந்து ஜெயலலிதா மரணத்திற்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட பலப்பல குழப்பங்களால், தேர்தலை நடத்த ஆளும் தரப்பு உரிய அக்கறை செலுத்த தயங்கியது.

 

இதனால், தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அஞ்சுகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மூச்சுக்கு மூச்சு தொடர்ந்து பேசி வந்தார். அது மிட்டுமின்றி உடனே தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் மட்டுமின்றி பலரும் வழக்குகளை தொடுத்தனர். ஆனால் இந்த வழக்குகளில் தமிழக மாநில தேர்தல் ஆணையம் ஏதேதோ சாக்குப் போக்குகளைக் கூறி, வாய்தா மேல் வாய்தா வாங்கி தேர்தல் நடத்த தாமதப்படுத்தியது.

 

கடைசியில், உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்தே ஆக வேண்டும், இனி வாய்தா இல்லை என உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதித்து மாநில தேர்தல் ஆணையத்துக்கு நெருக்கடி கொடுத்தது. அந்த நேரத்தில் தான் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற உற்சாகத்திலும் ஆளும் அதிமுக தரப்பு இருந்தது. இதனால், அதே உற்சாகத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளவும் அதிமுக தயாரானது. டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் ஒரே குரலில் கர்ஜிக்க ஆரம்பித்தனர். மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்க முனைப்பு காட்டத் தொடங்கியது. கடைசியில் டிசம்பர் 27, 30 தேதிகளில் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் என தேதியையும் அறிவித்துவிட்டது.

 

அதிமுகவின் இந்த வேகத்தைக் கண்டு உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுகவுக்கு பெரும் தயக்கம் வந்துவிட்டது. எப்படியாவது தேர்தலுக்கு தடை பெற்று விட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு மேல் வழக்குத் தொடர்ந்தது திமுக. இதனால், 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைத்துவிட்டு, மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மீண்டும் திமுக தடை கோரி வழக்கு தொடர்ந்தது. இதனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் எரிச்சலடைந்து, மீண்டும், மீண்டும் நீதிமன்ற கதவைத் தட்ட வேண்டாம்.தேர்தல் நடத்த தடை விதிக்க முடியாது என ஒரேயடியாக கதவை சாத்திவிட்டனர்.

 

இதனால் வேறு வழியின்றி, இந்த தேர்தலில் ஆளும் அதிமுகவுடன் மல்லுக்கட்ட திமுகவும் களத்தில் குதித்தது. ஆனாலும், திமுக தரப்பில் ஒப்புக்குத் தான் இந்தத் தேர்தலை சந்திப்பதாகவே தெரிகிறது. அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் தேர்தலில் அக்கறை செலுத்தியதாகத் தெரியவில்லை. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் கூடுதல் சீட் கேட்டு நெருக்கடி தரவும் இல்லை. இதனால் திமுக தரப்பிலும் தொண்டர்கள் உற்சாகமின்றியே உள்ளனர்.

 

திமுக தரப்பின் இந்த பின் வாங்கலால் ஆளும் அதிமுகவோ செம ஜாலி மூடில் இந்த தேர்தலை சந்திக்கிறது என்றே கூறலாம்.தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களும் வாக்காளர்களை ஏகத்துக்கும் கவனித்து குஷிப்படுத்த,ஒரு வழியாக முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலும் இன்று நடைபெறுகிறது.

 

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் இன்று புதிதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் வைக்கும் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மேலும் வாக்கு எண்ணிக்கை நாள் வரை அந்த இடத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என திமுக தரப்பில் மனு செய்யப்பட்டது. இந்த வழக்கை வரும் 30-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.


Leave a Reply