குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: ஊன்றுகோலுடன் வந்து சென்னை பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்த கமல்!!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் சென்னை பல்கலைக்கழக மாணவர்களை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக நாட்டில் உள்ள பல்லேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளை பிடித்தபடி அமைதியான முறையில் நடைபெறும் இந்தப் போராட்டம் விடிய விடிய நடைபெற்றது. இதனால் பல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் ஜனவரி 20-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில் இன்றும் பல்கலைக்கழக மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் 2-வது நாளாக நீடிக்கிறது. இது போல் சென்னை புதுக்கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி மட்டுமின்றி கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளின் மாணவர்களும் இன்று போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதற்கிடையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல் திடீரென இன்று மாலை, சென்னை பல்கலைக்கழகத்திற்கு வந்தார். அப்போது பல்கலைக்கழகத்தின் துழைவு வாயில் பூட்டப்பட்டிருந்தது. உள்ளே மாணவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், கமல் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதனால், கையில் ஊன்றுகோலுடன் வந்திருந்த கமல், கேட்டுக்கு வெளியில் நின்றபடியே, போராட்டம் நடத்தும் மாணவர்களைச் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், தாம் அரசியல் கட்சித் தலைவராக வரவில்லை என்றும், ஒரு இந்தியக் குடிமகனாக வந்துள்ளதாகவும், கொடுமையான குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்க வேண்டிய கடமை தமக்கும் உள்ளதாக கமல் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




