ஆண்டிபட்டி அருகே உள்ள அரசு பள்ளியில் கடந்த ஓராண்டாக போதிய வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலை, மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட சிறப்பாரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 108 மாணவர்கள் பயின்று வந்தனர். இந்த பள்ளி வளாகத்தில் மூன்று கட்டடங்கள் இருந்த நிலையில் கடுமையாக சேதமடைந்த கட்டிடம் ஒன்று கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது.
இதனால் போதிய வகுப்பறைகள் இல்லாமல் ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்கள் மரத்தடியில் பாடம் கற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் இடம் இல்லை என்றால் ஊர் சமுதாயக் கூடத்தில் பாடம் எடுக்கப்படுகிறது. அங்கு சத்துணவு திட்டம், குடிநீர் என அனைத்து வசதியும் இருந்தும் போதிய இடம் இல்லாமல் மாணவர்கள் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது இருக்கும் இரண்டு கட்டடங்கள் சேதம் அடைந்திருப்பதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.